Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

திருப்பதியில் சூரிய பிரபை வாகனத்தில் வீதிஉலா பத்ரி நாராயணன் அலங்காரத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி: நாளை தீர்த்தவாரியுடன் பிரமோற்சவம் நிறைவு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தில் சூரிய பிரபை வாகனத்தில் பத்ரி நாராயணன் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரமோற்சவம் நிறைவடைகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பிரமோற்சவத்தின் 7ம் நாளான நேற்று காலை சூரிய பகவானின் ரூபமும் தானே என்னும் விதமாக தங்க சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி பத்ரி நாராயணன் அலங்காரத்தில் நான்கு மாடவீதியில் உலா வந்து அருள்பாலித்தார்.  அப்போது திரளான பக்தர்கள் கோவிந்த கோவிந்தா என பக்தி முழக்கமிட்டு மலையப்ப சுவாமியை வழிபட்டனர். வீதிஉலாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடாக, கேரள, அஸ்சாம், சிக்கிம், மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த பக்தர்களின் கோலாட்டம், தப்பட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், பஜனைகள் செய்தபடியும் சுவாமியின் பல்வேறு வேடம் அணிந்து ஊர்வலமாக அணிவகுத்து வந்தனர்.

தொடர்ந்து நேற்றிரவு சந்திரபிரபை வாகனத்தின் மீது மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சூரியன் அக்னி வடிவம், சந்திரன் சாந்த வடிவம் என்பதால் இரண்டும் தனது அம்சமே என்னும் விதமாக சூரியன் மற்றும் சந்திர வாகனத்தில் சுவாமி வீதிஉலா வந்தார். 8ம் நாளான இன்று காலை தேரிலும், இரவு குதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது. நாளை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியும் அன்று மாலை கொடி இறக்கத்துடன் இந்த ஆண்டு பிரமோற்சவம் நிறைவு பெறுகிறது.