திருமலை: திருமலையில் உணவுப்பொருட்கள், குடிநீர் உள்ளிட்டவை அதிநவீன தொழில்நுட்பத்துடன் ஆய்வு செய்வதற்கான புதிய ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு நேற்று திறந்து வைத்தார். இதுகுறித்து பி.ஆர்.நாயுடு கூறுகையில், ‘திறந்து வைக்கப்பட்ட ஆய்வகத்தில் அன்னப்பிரசாதம் மற்றும் லட்டு பிரசாதத்தில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் 99 சதவீத தரம் இந்த ஆய்வகத்தில் சோதிக்கப்படும்.
இதற்கு முன்பு வெளிமாநிலங்களுக்கு மாதிரிகளை அனுப்பி சோதனைக்கு அனுப்ப வேண்டியிருந்தது. திருமலையில் இதுவரை நெய்யின் தரத்தை சோதிக்கும் ஆய்வு முறை இல்லை. முதன்முறையாக, நெய்யின் கலப்படம் மற்றும் தரத்தை சோதிக்க திருமலையிலேயே ஒரு ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒரே நாளில் நெய் மாதிரியைச் சோதித்து அறிக்கை அளிக்கக்கூடிய மேம்பட்ட இயந்திரங்களை தற்போது தொடங்கி வைத்துள்ளோம். இந்த இயந்திரங்கள் என்.டி.டி.பி. மூலம் நன்கொடையாக வழங்கப்பட்டது. மைசூரில் உள்ள ஆய்வகத்தில் சோதனைகளை நடத்த தேவஸ்தான ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது ’ என்றார்.