திருப்பதியில் ரூ.100 கோடி காணிக்கை திருட்டு புகார் அளித்த அதிகாரி கொலையில் ஓடும் ரயிலில் இருந்து பொம்மைகளை வீசி ஆய்வு: போலீஸ் விசாரணை தீவிரம்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில், உண்டியல் காணிக்கை எண்ணுவதில மோசடி செய்த எழுத்தர் ரவிக்குமாரை கடந்த 2023ல் விஜிலென்ஸ் அதிகார் சதீஸ்குமார் பிடித்தார். ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக விசாரிக்க எஸ்ஐடி அமைக்கப்பட்டுள்ளது. விஜிலென்ஸ் அதிகாரி சதீஷ்குமார், தாடிப்பத்திரி ரயில்வே இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். அவர் கடந்த 6ம் தேதி எஸ்ஐடி விசாரணைக்கு ஆஜரான நிலையில், மீண்டும் கடந்த 14ம் தேதி விசாரணைக்கு ஆஜராகி முக்கிய தகவல்களை அளிக்க இருந்தார்.
ஆனால் அன்றைய தினம் தாடிப்பத்திரி- குத்தி மார்கத்தில் கோமளி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் மர்மமான முறையில் சதீஷ்குமார் இறந்து கிடந்தார். நேற்று முன்தினம் சதீஷ்குமாரின உடலை டாக்டர்கள் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தினர். அப்போது அவரது தலையில் சி.டி. ஸ்கேன் செய்ததில் பின்பக்க தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததும், உடலில் எலும்புகள் உடைந்து சேதமாகி இருந்ததும் தெரியவந்தது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இந்த வழக்கில் 12 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சதீஸ்குமார் சடலம் கிடந்த இடத்தில் சம்பவத்தை மறுக்காட்சியமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி நேற்று ஓடும் ரயிலில் இருந்து அமர்ந்திருந்த நிலையில் ஒரு பொம்மையும், நிற்கும் நிலையில் மற்றொரு பொம்மையும் வெளியே வீசப்பட்டது.
இந்த முழு சம்பவமும் டிரோன் கேமராக்கள் மற்றும் அப்பகுதியில் பல்வேறு இடத்தில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவு செய்யப்பட்டது. இதில் ஒரு பொம்மை தண்டவாளத்திலிருந்து வெகு தொலைவில் விழுந்தது. 2வது பொம்மை தண்டவாளத்தின் அருகில் விழுந்தது. இந்த செயல்முறை சுமார் 5 மணி நேரம் தொடர்ந்தது. இந்த இரண்டு செயல்பாடுகளின் மூலம் வழக்கின் விசாரணையை போலீசார் துரிதப்படுத்தி உள்ளனர்.
* ரயிலில் இடம்மாறிய லக்கேஜ்
சதீஸ்குமார் பயணம் செய்த ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயிலில் அவருக்கு ஏ.1 ஏ.சி.பெட்டியில் 29ம் நம்பர் சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவரது லக்கேஜ் இருக்கை எண் 11ல் இருந்ததாக கூறிய ஊழியர்கள், அதனை 14ம் தேதி காலை 8 மணிக்கு திருப்பதி ஆர்பிஎப் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இதனால் சதீஷ்குமாரின் லக்கேஜ் இடம் மாறியது எப்படி? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இதற்காக சதீஷ்குமார் பயணம் செய்த ரயிலில் பணியில் இருந்த டிக்கெட் பரிசோதகர் மற்றும் பிற ஊழியர்கள் மற்றும் படுக்கை விரிப்பு உதவியாளர்கள் ராஜீவ் ரத்தன், கிருஷ்ணய்யா ஆகியோரிடம் ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


