திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள் எண்ணும் பரக்காமணியில் ஜீயர் மடத்தில் பணிபுரிந்த ரவிக்குமார் கண்காணிப்பு பணி செய்து வந்தார். அப்போது அவர் பல கோடி மதிப்புள்ள வெளிநாட்டு டாலர்கள், தங்க, வைர நகைகளை திருடி சென்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியின்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. பரக்காமணியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது 107 அமெரிக்க டாலர்களை ரவிக்குமார் திருடிச் சென்றதை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். அவர் ரூ.100 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளை திருடி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து ரவிக்குமார், அவரது குடும்பத்தினர் பெயரில் இருந்த ரூ.14 கோடி மதிப்புள்ள சொத்துக்களை தேவஸ்தானத்திற்கு தானமாக வழங்கியுள்ளனர். பின்னர் இந்த வழக்கு லோக்அதாலத் மூலம் சுமூக தீர்வு காணப்பட்டதாக கூறி முடித்து வைக்கப்பட்டது. இந்தநிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு தனிப்படை அமைத்து சிஐடியிடம் ஒப்படைத்தது. இதுதொடர்பாக தனிநபர் ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை ஏற்ற நீதிமன்றம் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டது.
இதைதொடர்ந்து இந்த வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆந்திர மாநில காவல்துறையை மூடுவது நல்லது என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் டிஜிபி மற்றும் காவல்துறை தூங்கிக்கொண்டிருக்கிறதா? என்றும் காவல் அமைப்பு இப்படித்தான் செயல்படுகிறதா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். கடந்த செப்டம்பர் 19ம் தேதி வழக்கு தொடர்பான ஆவணங்களை பறிமுதல் செய்ய உத்தரவுபிறப்பிக்கப்பட்ட பிறகும் ஏன் அதனை செயல்படுத்தவில்லை. ஆதாரங்களை சிதைக்க தவறு செய்தவர்களுக்கு காவல்துறை ஒத்துழைப்பதாக உள்ளது. இந்த வழக்கில் காவல்துறையின் நடவடிக்கைகள் எவ்வளவு நேர்மையாக உள்ளது என்பதை காட்டுகிறது.
சிபிசிஐடியில் ஐஜி பதவி இல்லை என்பதால் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தக்கூடாதா? என நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். வரும் 17ம்தேதிக்குள் வழக்கு தொடர்பான ஆவணங்களை பறிமுதல் செய்து உயர்நீதிமன்றத்தில் ஒப்படைக்க சிபிசிஐடிக்கு உத்தரவு பிறப்பித்து, வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஏ.டி.ஜி.பி. ரவிசங்கர் அய்யனார் தலைமையிலான குழு திருமலை கோயிலில் உள்ள பரக்காமணியை நேற்று ஆய்வு செய்தனர்.
இதன்பின்னர் ஏ.டி.ஜி.பி. ரவிசங்கர் கூறியதாவது;கோர்ட் உத்தரவுப்படி பரக்காமணியில் ஆய்வு செய்தோம். அறங்காவலர் குழுவில் கடந்த காலத்தில் இதுதொடர்பாக போடப்பட்ட தீர்மானம், லோக் அதாலத் மூலம் எவ்வாறு தீர்வு காணப்பட்டது, திருட்டு நடந்த நேரத்தில் இருந்த கேமரா பதிவுகள், காவல் நிலையத்தில் பதிவு செய்த ஆவணங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து ‘சீல்’ வைத்து எடுத்து செல்கிறோம். திருட்டு எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது? அப்போது பணியில் எத்தனை பேர் இருந்தார்கள்? போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்குகள் குறித்தும் தகவல் சேகரித்துள்ளோம். இவை கோர்ட்டில் ஒப்படைக்கப்படும். அதன்பிறகு கோர்ட் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கூறினார்.