திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவம்பர் மாதத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து ரூ.111.30 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தினர். ஆந்திர மாநிலம் உலக பிரசித்தி பெற்ற ஏழுமலையான் கோயிலில் நவம்பர் மாதம் 20.35 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். உண்டியலில் ரூ.111.30 கோடி காணிக்கையாக பக்தர்கள் செலுத்தினர். 97.01 லட்சம் லட்டுகள் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 19.74 லட்சம் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.
7.31 லட்சம் பக்தர்கள் மொட்டையடித்து தலைமுடி காணிக்கையாக செலுத்தியதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 29 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 20 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணிநேரத்தில் தரிசனம் செய்தனர்.