Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருப்பதி லட்டு நெய்யில் கலப்பட விவகாரம் சிபிஐ விசாரணைக்கு ஆஜரான தேவஸ்தான மாஜி செயல் அதிகாரி: விரைவில் கைதாக வாய்ப்பு

திருமலை: ஆந்திராவில் கடந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியின்போது, அப்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் உறவினர்களான தர்மா ரெட்டி திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரியாகவும், அறங்காவலர் குழு தலைவராக சுப்பா ரெட்டியும் பதவி வகித்தனர். பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்றார். தொடர்ந்து தேவஸ்தானத்தின் செயல் அதிகாரியாக சியாமளாராவ் நியமிக்கப்பட்டார். இதையடுத்து லட்டு தயாரிக்கும் நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதை அறிந்து ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது.

இந்த ஆய்வக முடிவில் தேவஸ்தானத்திற்கு சப்ளை செய்த நெய்யில் பன்றிக் கொழுப்பு, பாமாயில் உள்ளிட்டவை கலந்த ரசாயன நெய் சப்ளை செய்தது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து சிபிஐ இணை இயக்குனர் தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை நியமனம் செய்தனர். ஏஆர் டெய்ரியின் நிர்வாக இயக்குநர் ராஜு ராஜசேகரன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் 2022ம் ஆண்டில் சப்ளை செய்யப்பட்ட நெய் மாதிரிகளை சிபிஐ அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பியதில், வனஸ்பதி கலப்படம் செய்யப்பட்டதை உறுதிப்படுத்தப்பட்டது. 2022 முதல் 2024ம் ஆண்டுக்கு இடையில் 68 லட்சம் கிலோ கலப்பட நெய் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முன்னாள் செயல் அதிகாரி தர்மா ரெட்டியை விசாரணைக்கு சிபிஐ அதிகாரிகள் அழைத்தனர்.

இதனையடுத்து அலிபிரியில் உள்ள சிபிஐ சிறப்பு விசாரணை குழு அலுவலகத்தில் நேற்று தர்மா ரெட்டி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரது விளக்கத்தை பெற்ற அதிகாரிகள் அவரையும் விரைவில் கைது செய்யலாம் என கூறப்படுகிறது. மேலும் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டியும் விரைவில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் தர உள்ளார்.

* பிரசாத லட்டுவை தட்டிவிட்ட தர்மாரெட்டி

கலப்பட நெய் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகி விசாரணைக்கு பிறகு செல்ல முயன்ற தர்மா ரெட்டி ஊடகத்தினரை பார்த்து காரில் இருந்து கீழே இறங்கியபோது, ஜனசேனா கட்சியின் திருப்பதி மக்களவை பொறுப்பாளர் கிரண் ராயல் ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் தற்போது சுவையாக இருக்கிறது சாப்பிட்டு பாருங்கள் எனக்கூறி வழங்கினார். இதனால் தர்மா ரெட்டி உடனடியாக லட்டுவை தட்டிவிட்டு காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.