திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் கூட்ட நெரிசலை செயற்கைக்கோள் மூலம் நேரடியாக கண்காணிக்க முடிவு: இஸ்ரோ குழு திருமலை வருகை
திருமலை: திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் தலைவர் பிஆர்நாயுடு தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் பிஆர் நாயுடு கூறியதாவது: அறங்காவலர் குழு ஏற்பாடு செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் இந்த ஆண்டு 23ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை 9 நாட்கள் மிக சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
24ம் தேதி மீன லக்னத்தில் அன்று மாலை பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கப்படுகிறது. அன்று இரவு பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெறும். முதல்முறையாக பிரமோற்சவத்தின் போது கூட்டம் மேலாண்மையை கண்காணிப்பதற்காக இஸ்ரோ உடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அதன்படி பக்தர்கள் கூட்டத்தை செயற்கைக்கோள் மூலம் நேரடி கண்காணிப்பு மற்றும் செயற்கைக்கோள் மூலம் புகைப்படங்கள் மூலமாக வழங்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதற்காக விரைவில் இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவினர் திருமலைக்கு வந்து ஆய்வு செய்ய உள்ளனர். தட்டுப்பாடு இல்லாமல் லட்டு பிரசாதம் வழங்குவதற்கு 8 லட்சம் லட்டுகள் கூடுதலாக தயார் செய்து பக்தர்களுக்கு வழங்கப்படும். கருட சேவை அன்று 3 முதல் 4 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தைகள் காணாமல் போனால் குழந்தைகளை துரிதமாக கண்டுபிடிப்பதற்காக ஜியோ டாக்கிங் செய்யப்படும் என்றார்.