திருப்பதியில் நீண்ட நேரம் வரிசையில் நிற்காமல் விரைவாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய நேர ஒதுக்கீடு டோக்கன்கள் குறைக்க நடவடிக்கை: கூடுதல் செயல் அதிகாரி தகவல்
திருமலை: திருப்பதியில் ஏழுமலையானை பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய நேர ஒதுக்கீடு சர்வ தரிசன டோக்கன்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூடுதல் செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கையாசவுத்ரி காணொளி காட்சி மூலம் நேற்று தேவஸ்தான துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது: திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பருவகால அடிப்படையில் ஏற்படும் சிரமங்களை கண்டறிந்து, சேவைகளை வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும். பேரிடர் மீட்பு குழு கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு, தலைமை பொறியாளரின் தலைமையில் பேரிடர் மீட்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கனமழையின்போது பக்தர்கள் எந்த சிரமத்தையும் எதிர்கொள்ளாமல் இருக்கவும், பிரசாதம் சூடாக வழங்கவும், பக்தர்கள் வரிசையில் நிற்பதை தடுக்கும் உள்கட்டமைப்பை ஏற்பாடு செய்ய வேண்டும். அதன்படி சர்வ தரிசன நேர ஒதுக்கீடு டோக்கன்கள் வழங்குவதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், பக்தர்கள் நாராயணகிரி வரிசையில் நீண்ட நேரம் நிற்காமல் விரைவாக சுவாமி தரிசனம் செய்து வைக்க முடியும். மண் சரிவு மற்றும் மரங்கள் விழுந்தால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதவாறு அகற்ற வேண்டும். கட்டுப்பாட்டு அறை மூலம் தேவஸ்தானத்தின் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து, பிரச்னைகள் ஏற்படும்போது விரைவாக தீர்க்க வேண்டும். மின்சாரம், தகவல் தொழில்நுட்ப அதிகாரிகள் ஆன்லைன் சேவையில் பக்தர்கள் எந்த சிரமத்தையும் சந்திக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பேரிடர் காலங்களில் துறைகள் அடிப்படையில் வாட்ஸ்அப் சேவைகளை பயன்படுத்த வேண்டும். மழைக்காலத்தில் அக்ககர்லா கோயிலிலும், மால்வாடிகுண்டம் அருகே உள்ள நீர்வீழ்ச்சிகளிலும் பக்தர்கள் செல்பி எடுப்பதை தடுக்க பாதுகாப்பு பணியாளர்களை நியமிக்க வேண்டும். கோடை வெயில், மழை மற்றும் பனிக்காலங்களில் பக்தர்களின் பிரச்னைகளை தீர்க்க தனித்தனி செயல் திட்ட நடைமுறைகள் குறித்த பட்டியல் தயாரிக்க வேண்டும். கோயிலில் லட்டு கவுன்டர், மாட வீதிகளில் தரைகளில் அமைக்கப்பட்ட கூலிங் பெயிண்ட் காரணமாக வழுக்கும் அபாயம் இருப்பதால், அவற்றை நீக்கி உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இதேபோல் மழைக்காலங்களில் மரங்கள் விழும் அபாயம் இருப்பதால், பக்தர்கள் மரங்களுக்கு அடியில் இருக்கக்கூடாது, மருத்துவ துறையினரும் சிறப்பு கவனத்துடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
விஐபி தரிசன டிக்கெட் பெற்று தருவதாக ரூ.4 லட்சம் பறிப்பு
திருப்பதி அடுத்த சந்திரகிரி பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் சில நாட்களுக்கு முன்பு பல்வேறு பகுதிகளை சேர்ந்த அமன்கோயல், ராதிகாஅகர்வால், கவுதம்குப்தா, கோபால்அகர்வால், பாலகிருஷ்ணா ஆகியோரிடம் ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வாங்கி தருவதாக கூறியுள்ளார். அதை நம்பி 5 பேரும், அவர் கொடுத்த செல்போன் எண்ணிற்கு கூகுள்பே, போன்பே மூலம் ரூ.4 லட்சத்து 750ஐ செலுத்தியுள்ளனர். பின்னர் அவர் திருமலைக்கு சென்று போன் செய்தபோது, சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. உடனே திருமலை 2வது காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதேபோல் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகளும் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து அசோக்குமாரை (35) நேற்று கைது செய்தனர். இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகள் கூறுகையில், தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் மட்டும் டிக்கெட்டுகளை பெற வேண்டும். இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்’ என தெரிவித்துள்ளனர்.
ரூ.4.34 கோடி காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 76,343 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 18,768 பக்தர்கள் தலைமுடியை காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.4.34 கோடி காணிக்கை கிடைத்துள்ளது. இன்று காலை வைகுண்டம் கியூ காம்பளக்சில் உள்ள 26 அறைகளில் தங்கியுள்ள பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்திலும் நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 5 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர்.