திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நேற்றிரவுடன் நிறைவு பெற்றது. விழாவில் 5.80 லட்சம் பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்தனர். ரூ.25.12 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த மாதம் 24ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலை மற்றும் இரவில் தேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமி பல்வேறு வாகனங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான நேற்று காலை ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் (புஷ்கரணி) சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. ஆயிரக்கணக்காண பக்தர்கள் புனித நீராடினர்.
இந்நிலையில் 9 நாட்கள் நடைபெற்ற பிரம்மோற்சவம் நிறைவுபெற்றதை தொடர்ந்து நேற்றிரவு ஏழுமலையான் கோயில் முன் உள்ள தங்ககொடிமரத்தில் ஏற்றப்பட்டிருந்த கருடன் கொடி இறக்கப்பட்டது.
முன்னதாக தேவி, பூதேவி தாயார்களுடன் ஏழுமலையான் திருச்சி வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் பவனி நடைபெற்றது. இதுகுறித்து அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு நிருபர்களிடம் கூறியதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்திற்கு வந்த பக்தர்கள், தேவஸ்தானம் செய்த ஏற்பாடுகள் குறித்து 100 சதவீதம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். முதலமைச்சரும் ஒரு பதிவின் மூலம் மகிழ்ச்சியை தெரிவித்தார். பிரம்மோற்சவத்தின் 8 நாட்களில் 5.80 லட்சம் பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்தனர். இவர்கள் உண்டியலில் ரூ.25.12 கோடி செலுத்தியுள்ளனர். 26 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது.
2.42 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கையாக செலுத்தினர். 28 லட்சத்திற்கும் மேற்பட்ட லட்டுகள் விற்பனையானது. பிரம்மோற்சவத்தில் 60 டன் பூக்கள், 4 லட்சம் ரோஜா பூக்கள், 90 ஆயிரம் பருவகால பூக்கள் பயன்படுத்தப்பட்டு அலங்கரிக்கப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்களுக்கு 3,500 வாரி சேவகர்கள் மூலம் சிறப்பு சேவைகளை வழங்கினர். எவ்வித அசம்பாவிதமும் இன்றி பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது. இவ்வாறு அவர் கூறினார்.
20 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
பிரம்மோற்சவ நிறைவு நாளான நேற்று காலை முதல் இரவு வரை 75,188 பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்தனர். 31,640 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ரூ.2.66 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர். இன்று காலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. பேட்ட கங்கம்மா கோயில் வரை சுமார் 3 கிமீ தூரம் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ. 300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.