திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நேற்று முன்தினம் மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றிரவு முதல் சேவையாக பெரிய சேஷ வாகனத்தில் தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி பவனி நடைபெற்றது. 2ம் நாளான நேற்று காலை சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி குருவாயூர் கிருஷ்ணர் அலங்காரத்தில் மாடவீதியில் வலம் வந்தார். இரவு அன்னவாகன உற்சவத்தில் சரஸ்வதி தேவி அலங்காரத்தில் சுவாமி வீதி உலா நடந்தது.
3ம் நாளான இன்று காலை சிம்ம வாகனத்தில் மலையப்பசுவாமி மாடவீதியில் பவனி வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். இந்த உற்சவம் விலங்குகளுக்கு அரசனாக விளங்கும் சிங்கமும் நானே என்று உணர்த்தும் விதமாக மனிதர்களிடம் உள்ள விலங்குகளுக்குரிய தீய எண்ணங்களை நீக்கி கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக நடைபெறுகிறது. சுவாமி வீதிஉலாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களின், டப்பு மேளம், கோலாட்டம், பரத நாட்டியம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இன்றிரவு முத்துப்பந்தல் வாகன உற்சவம் நடைபெறுகிறது. முத்து எப்படி பரிசுத்தமானதோ அதைபோன்று நம் மனதில் தீய எண்ணங்கள் இன்றி பரிசுத்தமாக இறைவனை வணங்கினால் முக்தி பெறலாம் என்பதை விளக்கும் வகையில் முத்துபந்தல் வாகன உற்சவம் நடைபெறுகிறது.
4ம் நாளான நாளை காலை கற்பக விருட்ச வாகனத்திலும், நாளை இரவு சர்வ பூபாள வாகனத்திலும் மலையப்ப சுவாமி பவனி வர உள்ளார். 5ம் நாளான நாளை மறுநாள் முக்கிய நிகழ்வான கருடசேவை உற்சவம் நடைபெற உள்ளது. அன்று காலை மோகினி அலங்காரத்தில் வரும் மலையப்ப சுவாமிக்கு அலங்கரிக்க வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து கிளியுடன் கூடிய மாலை தமிழக இந்து அறநிலையத்துறை அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
16 மணிநேரம் காத்திருப்பு;
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 67,388 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 21,998 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ரூ.1.74 கோடி காணிக்கை செலுத்தினர். இன்று காலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 16 அறைகளில் தங்கியுள்ள பக்தர்கள் சுமார் 16 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் காலாண்டு தேர்வு இன்றுடன் நிறைவு பெறுவதால் நாளை முதல் விடுமுறை விடப்படுகிறது. எனவே, திருமலையில் பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.