திருப்பதி உண்டியலில் இருந்து ரூ.100 கோடி திருடிய வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவு: ஆந்திர ஐகோர்ட் அதிரடி
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் திருமலை பெரியஜீயர் மடத்தை சேர்ந்த எழுத்தர் சி.வி. ரவிக்குமார் என்பவர் பல ஆண்டுகளாக இருந்து வந்தார். இவர் கடந்த 2023ம் ஆண்டு உண்டியல் காணிக்கை எண்ணும் இடமான பரகாமணி பகுதியில் இருந்து அமெரிக்க டாலர்களை மறைத்து வெளியே கொண்டு வந்தார். அவர் மறைத்து வைத்திருந்த 112 அமெரிக்கா டாலர்களை விஜிலென்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் ரவிக்குமாரும், அவரது குடும்பத்தினரும் திருப்பதி மற்றும் சென்னையில் வாங்கி வைத்திருந்த பல கோடி ரூபாய் சொத்துக்களை திருமலை தேவஸ்தானம் எழுதி பெற்றது. பின்னர் அப்போதைய அதிகாரிகள் சமரசம் ஏற்பட்டதாக கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் லோக் அதாலத் தீர்வு கூறியதால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து ரவிக்குமாரை அவசரமாக பணிநீக்கம் செய்தனர்.
இந்த விவகாரத்தில் ரூ.100 கோடி மதிப்புள்ள தங்கம், வைரம், வெளிநாட்டு டாலர்களை ரவிக்குமார் பல கட்டங்களாக திருடிய நிலையில் அப்போதைய அதிகாரிகள் மரத்தடியில் பஞ்சாயத்து செய்ததுபோன்று அப்போதைய அதிகாரிகள் மற்றும் போலீசார் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வர் சந்திரபாபு உத்தரவின்பேரில் புதிய அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.
இதில் உறுப்பினராக பாஜகவை சேர்ந்த பானுபிரகாஷ் பொறுப்பேற்றார். அவர் கடந்த ஆட்சியில் நடந்த உண்டியல் காணிக்கை திருட்டு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடுவுக்கு கோரிக்கை விடுத்தார்.
ஆனால் லோக்அதாலத்தில் தீர்வு காணப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் அனுமதிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக தேவஸ்தான நடவடிக்கைகளை தொடர்ந்து, நேற்றுமுன்தினம் மனுவை விசாரித்த ஆந்திர மாநில உயர்நீதிமன்றம், கடந்த ஆண்டு லோக்அதலாத் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்யக்கோரி அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்பித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.