திருமலை: திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் சிக்கன் குழம்பு சாப்பிட்ட தேவஸ்தான தற்காலிக ஊழியர்கள் 2பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். திருப்பதி ஏழுமலையான் கோயில் அமைந்துள்ள திருமலை மற்றும் மலைப்பாதை, திருப்பதி அலிபிரி உள்ளிட்ட பகுதிகளில் இறைச்சி உணவுகள், மதுபானம், போதைப்பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்ய, பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பொருட்கள் மலைக்கு கொண்டு செல்வதை தடுக்க அலிபிரியில் தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது.
இந்நிலையில் திருப்பதி அலிபிரியில் தூய்மைப்பணியில் ஈடுபடும் பெண்கள் உள்ளிட்ட ஊழியர்கள் வழக்கம்போல் கடந்த 9ம் தேதி மதியம் உணவு சாப்பிட்டுள்ளனர். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்களது, வீட்டில் இருந்து சிக்கன் குழம்பு எடுத்து வந்து சாப்பிட்டுள்ளனர். இதனை அவ்வழியாக பாத யாத்திரையாக சென்ற பக்தர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தேவஸ்தானத்தில் பணிபுரியும் ஊழியர்களான நீங்களே மாமிச உணவு சாப்பிட்டால் எப்படி? என கேள்வி எழுப்பினர்.
பின்னர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தனர். இந்த வீடியோ வைரலானது. இதையடுத்து, சிக்கன் குழம்பு சாப்பிட்ட தேவஸ்தான ஒப்பந்த ஊழியர்களான ராமசாமி, சரசம்மா ஆகிய 2 பேர் மீது திருமலை 2வது டவுன் போலீசில் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் புகார் அளித்தனர். இந்நிலையில் தேவஸ்தான விதிகளை மீறி நடந்து கொண்ட 2 ஒப்பந்த ஊழியர்களையும் பணியில் இருந்து நீக்கி தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது.
