Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

திருப்பதியில் 6ம் நாள் பிரமோற்சவம் தங்க ரதத்தில் மலையப்ப சுவாமி பவனி: பெண் பக்தர்கள் மட்டும் வடம் பிடித்து இழுத்தனர்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தின் 6ம் நாளான நேற்று பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்த தங்க ரதத்தில் மலையப்ப சுவாமி பவனி வந்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 24ம் தேதி வருடாந்திர பிரமோற்சவம் தொடங்கிய நிலையில், தினமும் காலை, மற்றும் இரவில் மலையப்பசுவாமி சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி 4 மாட வீதிகளில் வலம் வருகிறார். இதில் பிரமோற்சவத்தின் முக்கிய சேவையான கருட சேவை நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் சுமார் 2.50 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து 6ம் நாளான நேற்று காலை அனுமந்த வாகனத்தில் சுவாமி நான்கு மாடவீதியில் பவனி வந்தார். த்ரேதா யுகத்தில் தனக்கு சேவை செய்த பக்தன் அனுமந்தனை வாகனமாக கொண்டு, கைகளில் வில், அம்பு ஏந்தி ராமர் அலங்காரத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளினார். அனுமனின் பக்தியை பக்தர்களுக்கு உணர்த்தும் வகையிலும், கிருஷ்ணர், ராமர், சீனிவாசபெருமாள் என அனைத்தும் நானே என்பதை விளக்கும் வகையில் இந்த வாகனசேவை நடைபெற்றது. சுவாமி வீதி உலாவின்போது நான்கு மாடவீதியில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்தும், ‘கோவிந்தா, கோவிந்தா’ என பக்தி முழக்கமிட்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து நேற்று மாலை 32 அடி உயரமுள்ள பிரமாண்டமான தங்க ரதத்தில் தேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமி பவனி வந்து பக்தகளுக்கு அருள்பாலித்தனர். இந்த தங்க ரதத்தை பெண் பக்தர்கள் மட்டும் வடம் பிடித்து இழுத்து வந்தனர். இரவு உற்சவத்தில் கஜேந்திர மோட்சத்தில் யானை காப்பாற்றிய திருவிளையாடலை விளக்கும் வகையிலும், தன்னை சரணடையும் பக்தர்களை காப்பற்றுவதாக மலையப்பசுவாமி தங்க யானை வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். இந்த வாகன சேவையில் சுவாமியை தரிசனம் செய்தால் யானை அளவுள்ள பிரச்னைகளும் தீர்ந்துவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தின் 7ம் நாளான இன்று காலை தங்க சூரிய பிரபை வாகனத்திலும், இரவு சந்திர பிரபை வாகனத்திலும் மலையப்ப சுவாமி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

* அக்டோபர் மாத சிறப்பு உற்சவங்கள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள சிறப்பு உற்சவங்களை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அக்டோபர் 1ம் தேதியான(நாளை) பிரமோற்சவத்தின் 8வது நாளில் தேரில் தாயார்களுடன் மலையப்ப சுவாமி வீதி உலாவும், அன்று இரவு குதிரை வாகனத்தில் கல்கி அலங்காரத்தில் அருள்பாலிக்க உள்ளார். தொடர்ந்து 2ம் தேதி(நாளை மறுதினம்), பிரமோற்சவத்தின் நிறைவான சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. அன்று மாலை கொடி இறக்கத்துடன் பிரமோற்சவம் நிறைவு பெறுகிறது. 3ம் தேதி பாக் சவாரி, 7ம் தேதி பவுர்ணமி கருட சேவை, 15ம் தேதி திருமலை நம்பி உற்சவம் ஆரம்பம், 20ம் தேதி ஏழுமலையான் கோயிலில் தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளது.

அதன்தொடர்ச்சியாக 23ம் தேதி பாகினிஹஸ்த போஜனம், 24ம் தேதி திருமலை நம்பி சாற்றுமுறை, 25ம் தேதி நாக சதுர்த்தியை முன்னிட்டு பெரிய சேஷ வாகனத்தில் தாயார்களுடன் மலையப்ப சுவாமி எழுந்தருளி அருள் பாலிக்க உள்ளார். இதையடுத்து 27ம் தேதி மணவாள மாமுனிகள் சாற்றுமுறை, 28ம் தேதி சேனைமுதலியார் வருட திரு நட்சத்திரம், 29ம் தேதி ஏழுமலையான் புஷ்பயாகத்திற்கான அங்குரார்ப்பணம், 31ம் தேதி ஏழுமலையான் கோயிலில் பூஷ்ப யாகம் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து 31ம் தேதி பூதத்தாழ்வார் வருட திருநட்சத்திரம், யாக்ஞவல்கியர் ஜெயந்தி உற்சவம் நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.