திருப்பதியில் 4ம் நாள் பிரமோற்சவம் கற்பக விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதிஉலா: இன்று மாலை கருட சேவை
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தின் 4ம் நாளான நேற்று கற்பக விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சொர்கத்தில் தேவர்களுக்கு கேட்கும் வரங்களை தருவது கற்பக விருட்ச மரம். அது போன்று கலியுகத்தில் தன் பக்தர்களுக்கு கேட்கும் வரங்களை தரக்கூடிய வகையில், திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தின் 4ம் நாளான நேற்று காலை மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தயார்களுடன் கற்பக விருட்ச வாகனத்தில் வீதி உலா வந்து அருள்பாலித்தார். சுவாமியின் வீதிஉலாவின்போது பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்களின் கலை நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.
தொடர்ந்து உலகத்தில் உள்ள மன்னர்களுக்கு எல்லாம் மன்னர் தானே என்பதை உணர்த்தும் விதமாக நேற்று இரவு ஏழுமலையான் கோயில் கோபுர வடிவிலான தங்க சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி தயார்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பிரமோற்சவத்தின் ஐந்தாவது நாளான இன்று காலை நாச்சியார் திருக்கோலத்தில் (மோகினி அலங்காரத்தில்) மாய மோகத்தை போக்கும் விதமாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார். மேலும் நாச்சியர் திருகோலத்தில் உள்ள தனது உருவத்தை மகாவிஷ்ணு கிருஷ்ணராக தோன்றி அவரது அழகை அவரே ரசித்தார் என்பது போல் நாச்சியாருடன் கிருஷ்ணரும் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார்.
மேலும் பிரமோற்சவத்தின் முக்கிய வாகன சேவையான கருட சேவை இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது. கருட சேவையை காண நேற்று காலை முதலே பக்தர்கள் திருப்பதிக்கு வந்தபடி உள்ளனர். கருட சேவையை காண 3.50 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால் அதற்கு தேவஸ்தான சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தரிகொண்ட வெங்கமாம்பா அன்னப்பிரசாத கூடத்தில் காலை 7 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை தொடர்ந்து பக்தர்களுக்கு இலவசமாக அன்னப்பிரசாதம் வழங்கப்படவுள்ளது. நான்கு மாட வீதியில் சுவாமி வீதிஉலா காண வரும் பக்தர்களுக்காக காலை 12 மணி முதல் 5 மணி வரை 2 மணி நேரத்திற்கு 1 முறை பால், மோர், அன்னப்பிரசாதங்கள் வழங்க தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.