திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவத்தின் 2ம் நாளான நேற்று காலை 5 தலைகளுடன் கூடிய சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி கையில் தாமரை மலருடன் ஜனார்த்தன அலங்காரத்தில் மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் நடனமாடியும், பஜனைகள் செய்தும், நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடியபடியும் ஊர்வலத்தில் பங்கேற்றனர். அதைத்தொடர்ந்து நேற்றிரவு நடந்த உற்சவத்தில் மலையப்பசுவாமி கைகளில் வீணையுடன் சரஸ்வதி அலங்காரத்தில், அன்ன வாகனத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் பவனி வந்து அருள்பாலித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
* பிரமோற்சவத்தில் இன்று
பிரமோற்சவத்தின் 3ம் நாளான இன்று காலை சிம்ம வாகனத்திலும், மாலை முத்துபந்தல் வாகனத்திலும் மலையப்ப சுவாமி எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அக்டோபர் 2ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரமோற்சவம் நிறைவடைகிறது.