திருமலை: கலியுக தெய்வமாக விளங்கும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினந்தோறும், வாராந்திர, வருடாந்திர உற்சவங்கள் என 450க்கும் மேற்பட்டவை நடத்தப்படுகிறது. இருப்பினும் உலக நலனுக்காக சீனிவாசபெருமாள் பிரம்மனை அழைத்து தனக்கு உற்சவம் நடத்த கேட்டு கொண்டதற்கேற்ப, பிரம்மனே முன்னின்று நடத்திய உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும், இதனைதான் பிரம்மோற்சவம் என அழைக்கப்படுகிறது.
புரட்டாசி மாதத்தில் வரும் வெங்கடேஸ்வர சுவாமியின் பிறந்த நட்சத்திரமான திருவோணம் நட்சத்திரத்தில் பிரம்மோற்சவம் தொடங்கி 9 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்தாண்டு பிரம்மோற்சவம் வரும் 24ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அக்டோபர் 2ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது. முன்னதாக 23ம்தேதி ஏழுமலையானின் சேனாதிபதியான விஸ்வ சேனாதிபதி மாடவீதிகளில் ஊர்வலம் நடைபெறும். அப்போது கோயிலுக்கு பின்புறம் உள்ள வசந்த மண்டபத்தில் ஈசான்ய மூலையில் புற்று மண்ணை சேகரித்து கோயிலுக்கு சென்று 9பானைகளில் நிரப்பி நவதானியங்கள் வைத்து சிறப்பு பூஜை செய்யப்படும். புற்று மண்ணில் வைத்த நவதானியங்களுக்கு பிரம்மோற்சவம் முடியும் வரை தண்ணீர் ஊற்றி வளர்க்கப்படும். இந்த முளைப்பாரி எவ்வாறு வளர்ந்து வரும் என்பதை பொறுத்து பிரம்மோற்சவம் சிறப்பாக நடக்கும் என கருதப்படும்.
பிரம்மோற்சவத்தின் முதல் நாளான 24ம்தேதி மாலை அனைத்து தேவர்களையும், தேவதைகளையும் பிரம்மாண்ட நாயகனுக்கு நடைபெறும் பிரம்மோற்சவ விழாவை காண அழைக்கும் விதமாக வேத மந்திரங்கள் முழங்க தங்க கொடிமரத்தில் கருடர் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்படும்.
முதல் நாள் இரவு
பிரம்மோற்சவத்தின் முதல் நாள் இரவு பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி வீதியுலா நடைபெறும்.
2ம் நாள் காலை
ஐந்து தலைகளுடன் உள்ள பாம்பு (சின்னசேஷம்) வாகனத்தின் மீது மலையப்ப சுவாமி பவனி நடைபெறும். அன்றிரவு உற்சவத்தில் மலையப்ப சுவாமி கையில் வீணையுடன் சரஸ்வதி தேவி அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் வீதியுலா வருவார்.
3ம் நாள் காலை
சிம்ம வாகனத்தில் யோக நரசிம்ம சுவாமி அலங்காரத்தில் மலையப்பசுவாமி பவனி வருவார். அன்றிரவு உற்சவத்தில் முத்து பல்லக்கில் முத்தங்கி அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி பவனி வந்து அருள்பாலிப்பார்.
4ம் நாள் காலை
தங்க மரத்தில் பல வகையான பழங்களுடன் இருக்கும் கற்பக விருட்ச வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி பசுக்களை காக்கும் கோபாலனாக காட்சி தருவார். அன்றிரவு கோயில் கோபுர வடிவத்தில் உள்ள சர்வபூபால வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
5ம் நாள் காலை
நாச்சியார் திருக்கோலத்தில் மலையப்பசுவாமி பல்லக்கில் பவனி வந்து காட்சி தருவார். அப்போது தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து ஆண்டாள் சூடி கொடுக்கும் மாலை, பட்டு புடவை, கிளி ஆகியவற்றை அணிந்து மோகினி அலங்காரத்தில் (நாச்சியார் திருக்கோலம்) மலையப்பசுவாமி பவனி வருவார். அவரது அழகை ரசித்தபடி கிருஷ்ணர் தனி பல்லக்கில் பின்தொடர்ந்து ெசல்வார். அன்றிரவு கருட சேவை உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது. வேத ரூபங்களில் உள்ள கருடர் மீது மலையப்ப சுவாமி மகா விஷ்ணு அலங்காரத்தில் அருள் பாலிப்பார். அப்போது மலையப்ப சுவாமிக்கு, ஏழுமலையான் கோயிலில் மூலவருக்கு (வெங்கடேஸ்வர பெருமாள்) தினமும் அணிவிக்கப்படும் லட்சுமி ஆரம், மகரகண்டி ஆரம் ஆகியவை அணிவிக்கப்படும்.
6ம் நாள் காலை
திரேதாயுகத்தில் ஸ்ரீராமரின் தீவிர பக்தராக விளங்கிய அனுமந்தன் வாகனத்தில் மலையப்ப சுவாமி கோதண்ட ராமராக காட்சி தருவார். மாலை உற்சவத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி தங்க தேரோட்டம் நடைபெறும். இந்த தேரை பெண்கள் மட்டுமே இழுத்து செல்வது தனி சிறப்பு. இரவு உற்சவத்தில் யானை வாகனத்தில் மலையப்பசுவாமி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ள வெங்கடேஸ்வர பெருமாள் அலங்காரத்தில் பவனி நடைபெறும்.
7ம் நாள் காலை
ஏழு குதிரைகள் பூட்டிய சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி சிவப்பு வஸ்திரம் மற்றும் சிவப்பு நிற மாலை அணிந்து மாடவீதியில் வலம் வருவார். அன்றிரவு சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி, பால கிருஷ்ணன் வெண்ணெய் சாப்பிடும் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
8ம் நாள் காலை
30 அடி உயரமுள்ள தேரில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி மாடவீதிகளில் வலம் வருவார். அன்றிரவு பாய்ந்தோடும் குதிரை வாகனத்தில், கைகளில் கத்தி, கேடயங்கள் ஏந்தி கல்வி அலங்காரத்தில் மலைப்பசுவாமி வீதியுலா வருவார்.
9ம் நாள் காலை
ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி பல்லக்கிலும், சக்கரத்தாழ்வாரும் கோயிலில் இருந்து பூவராக சுவாமி கோயில் முன்பு எழுந்தருள்வார்கள். அப்போது புஷ்கரணியில் தீர்த்தவாரி நடைபெறும். பிரம்மோற்சவத்தின் நிறைவாக அன்று மாலை தங்க கொடிமரத்தில் இருந்து பிரம்மோற்சவ கொடி வேத மந்திரங்கள் முழங்க இறக்கப்படும். 9 நாட்கள் நடைபெறும் இந்த பிரம்மோற்சவத்தில் சுவாமி வீதியுலாவின்போது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலை குழுவினர் பரதம், கோலாட்டம், குச்சிப்பிடி, கதக்களி போன்ற தங்களது பாரம்பரிய நடனங்களை ஆடியபடியும், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேச பெருமாள், கிருஷ்ணர், லட்சுமி, சிவன், பார்வதி போன்ற பல்வேறு சுவாமி வேடம் அணிந்தும், நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்ற பாடல்களை பாடியபடியும் பங்கேற்பார்கள்.