திருப்பதி அலிபிரி - செர்ல்லோபள்ளி சாலையில் சிறுத்தை நடமாட்டம்: ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைகழக வளாகத்தில் சிறுத்தை சிக்கியது
ஆந்திரப் பிரதேச: திருப்பதியில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கி இருக்கிறது. திருப்பதியில் உள்ள அலிபிரி இருந்து செர்ல்லோபள்ளி செல்லும் சாலையில் ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம், அரவிந்த் கண் மருத்துவமனை, அறிவியல் ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக சிறுத்தை நடமாட்டம் இருந்து வந்தது.
இந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று அவ்வழியாக சென்ற வாகன ஓட்டி துரத்தி சென்று தாக்கமுயன்றது. இந்த சம்பவத்தை அடுத்து அந்த பகுதி முழுவதும் 40 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள், ஆய்வு மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், சிறுத்தைகள் அதிகமாக உள்ள இடங்களில் நான்கு கூண்டுகள் வைத்து அதனை பிடிப்பதுக்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் அருகே ஒரு மானை பாதி சாப்பிட்ட நிலையில், சிறுத்தை விட்டு சென்று இருந்தது. இதனை அடுத்து மீண்டும் அதே இடத்திற்கு சிறுத்தை வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கண்டறிந்த வனத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் ஒரு கூண்டு அமைத்தனர். இந்த நிலையில், அந்த கூண்டில் இன்று காலை சிறுத்தை ஒன்று பிடிபட்டது. அந்த பிடிபட்ட சிறுத்தையை வனப்பகுதியில் கொண்டு சென்று விடுவதற்கான பணியில் தற்போது வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அந்த பகுதியில் மூன்று முதல் நான்கு சிறுத்தைகள் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக பல்கலைக்கழகம் விடுதிகளில் உள்ள மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அப்பகுதி மக்கள் கூறிய நிலையில், அந்த சிறுத்தையை பிடிக்கவேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர். இருப்பினும் வனத்துறை அதிகாரிகள் இது குறித்து மேற்கொண்டு எவ்வாறு நடவடிக்கை எடுப்பார்கள் என்பது குறித்து விரைவில் அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த சிறுத்தை பிடிபட்ட சம்பவம் தற்போது அப்பகுதி உள்ளவர்களுக்கு ஒரு நிம்மதி அளித்து இருப்பதாக கூறப்படுகிறது.