எங்களது ஆட்சியின்போது திருப்பதி உண்டியலில் ரூ.100 கோடி காணிக்கை திருடியதாக நிரூபித்தால் தலையை வெட்டிக்கொள்வேன்: முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பேட்டி
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பரக்காமணியில் பெரிய ஜீயர் மடத்தில் எழுத்தராக இருந்த ரவிக்குமார், காணிக்கை எண்ணும்போது வெளிநாட்டு டாலர்களை மறைத்து திருடி சென்ற விவகாரத்தில் ஆந்திர உயர்நீதிமன்றம் கடந்த 19ம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. இதில் முன்னாள் அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழுவினருக்கு தொடர்பு இருப்பதாக அறங்காவலர் குழு உறுப்பினர் பானுபிரகாஷ் ரெட்டி குற்றம்சாட்டினார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி நேற்று அவரது இல்லத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தேவஸ்தானத்தில் நான் தலைவராக இருந்தபோது பரக்காமணியில் திருட்டு நடந்ததாக குற்றம் சாட்டினார்கள். அது உண்மையாக இருந்தால், அலிபிரியில் என் தலையை வெட்டி கொள்கிறேன்.
இல்லையென்றால், அவர்கள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். ஆட்சியாளர்கள் ஏழுமலையானை ஒரு விளையாட்டுப் பொருளாக அரசியலுக்கு பயன்படுத்தி கொள்கின்றனர். கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி அன்று, ஜீயர் மடத்தைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரிடம் இருந்து பரக்காமணியில் திருடிய ரூ.72 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு டாலர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதற்கு பரிகாரமாக மன்னிப்பு கேட்டு பத்திரபதிவில் ரூ.14 கோடி மதிப்புள்ள, சந்தை மதிப்பில் ரூ.100 கோடி சொத்துக்களை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 19ம் ேததி எழுதி கொடுத்தனர். ரவிகுமார் பிடிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவைதான் இப்போது வெளியிட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.