திருப்பதி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலில் தீ விபத்து : ஒன்றிய அரசு ரயில்வே துறையை அலட்சியமாக இயக்குவதாக குற்றச்சாட்டு
திருப்பதி : திருப்பதி ரயில் நிலையத்தில் நின்று கொண்டு இருந்த ரயிலின் காலியான 2 பெட்டிகளில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஒன்றிய பாஜக அரசு மெத்தன போக்கில் ரயில்வே துறையை இயக்கி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ராஜஸ்தானில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ஹிஸார் ரயில் திருப்பதி ரயில் நிலையத்தில் நின்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென ரயிலின் 2 பெட்டிகள் தீப்பிடித்து எறிந்தன. இதனால் ரயில்வே நிலையத்தில் இருந்த பயணிகள் பீதியில் அலறி அடித்து கொண்டு ஓடினர். உடனடியாக ரயில்வே ஊழியர்கள் தீப்பிடித்த பெட்டிகளை மற்ற பெட்டிகளில் கழற்றிவிட்டதால் தீ பரவுவது தடுக்கப்பட்டது.
இந்த விபத்தால் அதே தண்டவாளத்தில் வர இருந்த வந்தே பாரத் ரயிலும் உரிய நேரத்தில் நிறுத்தப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். நல்வாய்ப்பாக தீப்பிடித்த 2 பெட்டிகளிலும் பயணிகள் யாரும் இல்லாததால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒன்றிய பாஜக அரசு மெத்தன போக்கில் ரயில்வேதுறையை இயக்கி வருவதாக ரயில் பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.