Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருப்பரங்குன்றத்தில் 2 மலை உச்சிகள் உள்ளது; ஒன்றில் தர்காவும் மற்றொரு உச்சியில் உச்சிப்பிள்ளையார் கோயிலும் உள்ளது : கோவில் நிர்வாகம்

மதுரை : திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இன்று இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என்று ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபத்தை ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை ரத்து செய்யக் கோரி மாவட்ட ஆட்சியர் கோயில், செயல் அலுவலர் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு இன்று (டிச.12) காலை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஜெயசந்திரன், ராம கிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வழக்கு வந்தபோது, அரசு தரப்பில் ‘திருப்பரங்குன்றம் மலை மீது கடந்த 73 ஆண்டுகலாகவே உச்சி பிள்ளையர் கோயிலில் தான் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இதில் எந்தப் பிரச்சினையும் எழுப்பப்படவில்லை. மலை உச்சியில் இருப்பது தீபத்துண் அல்ல... சர்வே தூண் தான்,"என வாதிடப்பட்டது.

அதே போல் கோயில் நிர்வாகம் தரப்பில், "தீபம் ஏற்ற வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தனி நீதிபதி தனது அதிகார வரம்பை மீறி உத்தரவு பிறப்பித்துள்ளார். முழுக்க முழுக்க மனுதாரருக்கு சாதகமான விபரங்களை மட்டுமே தனி நீதிபதி கருத்தில் கொண்டுள்ளார். திருப்பரங்குன்றத்தில் 2 மலை உச்சிகள் உள்ளது; ஒன்றில் தர்காவும் மற்றொரு உச்சியில் உச்சிப்பிள்ளையார் கோயிலும் உள்ளது. 175 ஆண்டுகளாக தர்கா அருகில் உள்ள தூணில் தீபம் ஏற்றியதற்கான எந்த ஆதாரமும் இல்லை. மனுதாரர் வேறு இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தால், அதை கோயில் நிர்வாகத்திடம் வைக்க வேண்டும்.

கோயில் நிர்வாகம்தான் பரிசீலித்து முடிவு எடுக்க முடியும். உச்சியில் இருப்பதால் மட்டுமே கல் தூணில் தீபம் ஏற்ற முடியாது. திருவண்ணாமலையை எடுத்துக்கொண்டால், பல நூறு மீட்டர் துணிகள், பல நூறு லிட்டர் நெய் பயன்படுத்தப்படுகின்றன. இது போல, இங்கேயும் செய்தால் எவ்வளவு வெப்பம் வெளிப்படும்? பக்கத்தில் உள்ள தர்காவின் நிலை என்ன ஆகும்?" என வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், "வழக்கில் இன்று இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது. மீதமுள்ள மனுதாரர்கள் வரும் திங்கள் அன்று வாதங்களை முன்வைக்கலாம்,"என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.