*விவசாயிகள் பொதுமக்கள் கவலை
திருமங்கலம் : பரவலான மழை பெய்தும் திருமங்கலம் பகுதியில் உள்ள பெருவாரியான கண்மாய்கள் வறண்டு ‘ காணப்படுவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
வைகை தண்ணீரை கடைமடை பகுதிகளுக்கு திறந்துவிட வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.திருமங்கலம் பகுதியில் பொன்னமங்கலம், கரடிக்கல், செளரிக்காம்பட்டி, உரப்பனூர், குதிரைசாரிகுளம், மறவன்குளம், ஊராண்ட உரப்பனூர், அம்மாபட்டி, சாத்தங்குடி, புலியூர், திரளி உள்ளிட்ட பல்வேறு கண்மாய்கள் உள்ளன.
இந்த தாலுகாவில் மழைக்காலங்களில் முதலில் அம்மாபட்டி கண்மாயும், அதனை தொடர்ந்து புலியூர் கண்மாயும் நிரம்புவது வழக்கம். ஆனால் இந்தாண்டு மழைப்பொழிவு என்பது சாரலாகவே இதுவரை தொடர்கிறது. இதனால் இந்த கண்மாய்களுக்கு போதிய நீர் வரத்து இல்லாமல் இருக்கிறது.
தற்போது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பருவமழை காரணமாக கண்மாய், குளங்கள் நிரம்பி வழியும் நிலையில் உள்ளன. ஆனால் திருமங்கலம் பகுதியில் உள்ள அனைத்து கண்மாய்களும் நீரின்றி வறண்ட நிலையில் காணப்படுவதால் தாலுகா விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். ஆடு, மாடுகளுக்கு கூட கண்மாய்களில் தண்ணீர் இல்லாத நிலை இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள வைகை அணை வடகிழக்கு பருவமழையால் நிரம்பியுள்ளது. இதனால் அணையிலிருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இருப்பினும் திருமங்கலம் பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. இதன் காரணமாக குதிரைசாரிகுளம், உரப்பனூர், பொன்னமங்கலம், கிண்ணிமங்கலம், மாவிலிபட்டி, கரடிக்கல், மறவன்குளம் உள்ளிட்ட பல்வேறு கண்மாய்கள் தண்ணீர் இன்றி காட்சியளிக்கிறது.
கடந்த மூன்று தினங்களாக இப்பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாகவும் கண்மாய்களுக்கு போதிய அளவில் நீர்வரத்து இல்லாமல் இருக்கிறது. போதுமான அளவு மழை பெய்யாவிடில் திருமங்கலம் தாலுகாவில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து குடிநீர் பிரச்னை எழும் நிலை ஏற்படும் என்ற நிலைதான் தற்போது உள்ளது.
இதற்கிடையே வைகை அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் திருமங்கலம் பகுதி கண்மாய்களுக்கு இதுவரையில் வரவில்லை. இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
இது குறித்து உரப்பனூரினை சேர்ந்த தமிழ்நாடு விவசாய சங்க நிர்வாக குழு உறுப்பினர் பழனி கூறுகையில், ‘கடந்தமாதம் முதல் வைகையிலிருந்து கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் தற்போது செல்லம்பட்டி கண்மாய் வரை மட்டுமே தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது.
திருமங்கலம் பிரதான கால்வாய் வழியாக திறந்துவிடப்படும் வைகை நீர் திருமங்கலம் தாலுகாவில் சொரிகாம்பட்டி, கிண்ணிமங்கலம், மாவிலிபட்டி, உரப்பனூர், கரடிக்கல், பாப்பாங்குளம், குதிரைசாரிகுளம், மறவன் குளம் உள்ளிட்ட கடைமடை கண்மாய்களுக்கு வராமல் போகிறது. ஏனெனில் தண்ணீர் வந்து சேர்வதற்குள் மடைகள் அடைக்கப்படுகின்றன. கடைமடை பகுதியில் உள்ள கண்மாய்களுக்கும் தண்ணீர் வரும்படி மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்மாய் பாசனத்தினை மட்டுமே நம்பியுள்ள விவசாயிகள், வேறு வழியின்றி இந்த நடவடிக்கைக்காக காத்திருக்கிறோம். தமிழகம் முழுவதும் மழை பெய்தும் திருமங்கலம் பகுதியில் போதிய மழை இல்லாமல் இருக்கிறது. எனவே வைகை அணையில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் கடைமடை வரை வந்து சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே விவசாயம் செழிக்கும். விவசாயிகள் பலனடைவர். அத்துடன் திருமங்கலம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் உயரும்’ என்றார்.
