Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருமலா பால் நிறுவன மேலாளர் நவீன் பொல்லினேனி தற்கொலை விவகாரத்தில் மாதவரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

சென்னை: திருமலா பால் நிறுவன மேலாளர் நவீன் பொல்லினேனி தற்கொலை விவகாரத்தில் கையாடல் புகார் குறித்து வழக்குப் பதிவு செய்யாமல் விசாரணை நடத்தியதால் மாதவரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் விஜயபாஸ்கரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்தவர் நவீன் பொல்லினேனி(37). புழல் அடுத்த கதிர்வேடு, பிரிட்டானியா நகர் முதல் தெருவில் வசித்து வந்தார். இவர், சென்னையில் உள்ள திருமலா பால் நிறுவனத்தில் மேலாளராக கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், வருடாந்திர கணக்கு சமர்ப்பிக்கும்போது, இவர் ரூ.45 கோடி பணத்தை கையாடல் செய்தது உயரதிகாரிகளுக்கு தெரியவந்தது. திருமலா பால் நிறுவன சட்ட ஆலோசகர்கள் இதுகுறித்து கொளத்தூர் காவல் துணை ஆணையர் பாண்டியராஜனிடம் புகார் கொடுத்துள்ளனர்.

புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்துவதற்காக, நவீன் பஞ்சலாலை செல்போனில் தொடர்புகொண்டு பேசியபோது, அவர், விசாரணைக்கு நாளை வருகிறேன் எனவும், பணத்தை நான் கொடுத்து விடுகிறேன் என்றும் கூறி தொடர்பை துண்டித்துள்ளார். பின்னர், போலீசுக்கு பயந்துபோய், அங்கு புதிதாக கட்டப்படவுள்ள வளாகத்தில் உள்ள குடிசை வீட்டில் இருந்த மின்விசிறியில், நேற்று முன்தினம் நள்ளிரவு நைலான் கயிறால் நவீன் பஞ்சலால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுதொடர்பாக புழல் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, தற்கொலை செய்வதற்கு முன்பாக மேலாளர் நவீன் பஞ்சலால் பால் நிறுவன அதிகாரிகள் மற்றும் தனது சகோதரி ஆகியோருக்கு மின் அஞ்சலில் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், "என்னை சந்தித்த நரேஷ் மற்றும் முகுந்த் ஆகிய இருவரும் மோசடி செய்த பணத்தை திருப்பி கொடுத்தாலும் ஜெயிலில் இருப்பாய் என மிரட்டினர். இதனால் அச்சமடைந்து தற்கொலை செய்ய முடிவு செய்தேன்.

புகார் அளிக்க முடிவு செய்ததால் என்னுடைய எதிர்காலத்தை எண்ணி பயந்து தற்கொலை முடிவுக்கு வந்தேன். என்னுடைய தற்கொலைக்கு திருமலா பால் கம்பெனி நிர்வாகமே காரணம். மோசடி குறித்து வெளியே தெரிந்த பிறகு நான் அதை சரி செய்து விடுவதாகக் கூறி முதல் கட்டமாக கடந்த மாதம் 26ம் தேதி 5 கோடி ரூபாய் திருப்பி செலுத்தினேன். பின்னர் மூன்று மாதத்தில் மீதி தொகையை செலுத்தி விடுவதாக உறுதி அளித்தேன். இந்த மோசடியில் எனக்கு மட்டுமே தொடர்பு, வேறு யாருக்கும் தொடர்பில்லை" என அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் திருமலா பால் நிறுவன மேலாளர் நவீன் பொல்லினேனி தற்கொலை விவகாரத்தில் கையாடல் புகார் குறித்து வழக்குப் பதிவு செய்யாமல் விசாரணை நடத்தியதால் மாதவரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் விஜயபாஸ்கரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.