Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம்; ஏழுமலையான் கோயிலில் நாளை அங்குரார்ப்பணம்: நாளை மறுநாள் கொடியேற்றம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நாளை அங்குரார்ப்பணமும், விஷ்வசேனாதிபதி வீதியுலாவும் நடைபெறுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் 24ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அக்டோபர் 2ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது. பிரம்மோற்சவம் எவ்வித இடையூறும் இன்றி சிறப்பாக நடைபெறுவதற்காக ஏழுமலையானின் சேனாதிபதியான விஸ்வ சேனாதிபதி நாளை மாடவீதிகளில் பவனி வந்து ஏற்பாடுகளை பார்வையிடும் நிகழ்ச்சி நடக்கிறது. இதை ெதாடர்ந்து அங்குரார்ப்பணம் நாளை இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. இதையொட்டி கோயிலுக்கு பின்புறம் உள்ள வசந்த மண்டபம் ஈசான்ய மூலையில் புற்று மண் சேகரிக்கப்படும்.

இதற்காக முதலில் பூமி தாய்க்கு மேதினி பூஜை செய்யப்படும். பின்னர் சேகரிக்கப்பட்ட புற்றுமண் மேளதாளம் முழங்க கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு பானைகளில் நிரப்பப்படும். 9கிரகங்களுக்கு அடையாளமாக நவதானியங்கள் அவற்றில் விதைக்கப்படும். அதாவது சூரியனுக்கு கோதுமை, சந்திரனுக்கு நெல், செவ்வாய்க்கு துவரை, புதனுக்கு பாசிப்பயறு, குருவுக்கு கொண்டைக்கடலை, சுக்ரனுக்கு மொச்சை, சனி பகவானுக்கு எள், ராகுவுக்கு உளுந்து, கேதுவுக்கு கொள்ளு ஆகிய நவதானியங்கள் நிரப்பப்படும்.

இத்துடன் அஷ்டதிக் பாலகர்களான இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயுதேவன், குபேரன் மற்றும் ஈசான்யத்துடன் 49 தேவதைகளுக்கு பூஜை செய்யப்படும். இந்த நவதானியங்கள் பிரம்மோற்சவத்தின் கடைசி நாளில், முளைப்பாரி பிரிக்கப்பட்டு சுவாமிக்கு அக்ஷதரோதனை செய்யப்படும். இதைதொடர்ந்து நாளை மறுநாள் (24ம் தேதி) மாலை கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்குகிறது. வேத மந்திரங்கள் முழங்க தங்க கொடிமரத்தில் கருடர் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்படும். இதைதொடர்ந்து முதல் சேவையாக பெரிய சேஷ வாகனத்தில் தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி வீதியுலா நடைபெறும். இதேபோல் 9 நாட்களுக்கும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் முழுவதும் வண்ண மலர்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருமலை முழுவதும் வண்ண மின் விளக்குகளால் சுவாமியின் உருவங்கள், தசாவதார காட்சிகள், ஏழுமலையானின் திருவிளையாடல் காட்சிகள் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பஸ்கள் இயக்கம்;

திருப்பதி கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி ஆந்திர மாநில போக்குவரத்துக்கழகம் சார்பில் தமிழகம், கர்நாடகம், தெலங்கானாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், விரைவு போக்குவரத்துக்கழகமும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்குகின்றன.

வேலூர் மண்டல அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் நாளை மறுநாள் (24ம்தேதி) முதல் வரும் 2ம்தேதி வரை வேலூரில் இருந்து 17 சிறப்பு பஸ்களும், திருப்பத்தூரில் இருந்து 10 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.

ரூ.3.73 கோடி காணிக்கை;

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 67,408 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 16,597 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.73 கோடியை பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இன்றுகாலை வைகுண்டம் கியூ காம்பளக்சில் ஒருசில அறைகளில் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சுமார் 5 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். ரூ.300 சிறப்பு தரிசன கட்டணம் பெற்ற பக்தர்கள் 1மணிநேரத்தில் தரிசனம் செய்தனர்.