திருமலை: திருப்பதி மற்றும் ஏழுமலையான் கோயில் அமைந்துள்ள திருமலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் கொளுத்தியது. இதனால் திருமலை ஏழுமலைளான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று மதியத்திற்கு பிறகு வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. இரவு லேசாக தொடங்கிய மழை அதன்பிறகு கனமழையாக மாறியது. இன்று காலை வரை விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக திருமலை முழுவதும் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்த பக்தர்கள் மழையில் நனைந்தபடியே தாங்கள் தங்கியிருக்கும் அறைகளுக்கும், பஸ்களுக்கும் சென்றனர். சிலர் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த நிழற்பந்தல்கள், மடங்கள் மற்றும் தேவஸ்தான அறைகளில் தங்கினர். இந்த மழையின் காரணமாக வெயில் தாக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏழுமலையானை தரிசிக்க 20 மணி நேரம் காத்திருப்பு;
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 63,897 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 29,500 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கை ரூ.3.66 கோடி கிடைத்துள்ளது. இன்று பக்தர்கள் தங்கும் அறைகள் அனைத்தும் நிரம்பிய நிலையில் வெளியே நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால் சுவாமியை தரிசிக்க 20 மணி நேரம் காத்திருக்க வேண்டிய உள்ளது. ரூ.300 கட்டண டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.