திருமலா பால் நிறுவன மேலாளர் தற்கொலை மாதவரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்: ஆணையர் அருண் நடவடிக்கை
சென்னை: திருமலா பால் நிறுவன மேலாளர் தற்கொலை விவகாரத்தில் மாதவரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து, ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் நவீன் பஞ்சலால் (37). புழல் அருகே கதிர்வேடு பகுதியில் வசித்து வந்தார். கடந்த 3 வருடங்களாக ரெட்டேரியில் உள்ள திருமலா பால் நிறுவனத்தில் கருவூல மேலாளராக பணியாற்றினார். இந்நிலையில் நிறுவனத்தில் ரூ.45 கோடி வரை நவீன் பஞ்சலால் கையாடல் செய்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக நிறுவன அதிகாரிகள் நவீன் மீது கொளத்தூர் துணை ஆணையர் பாண்டியராஜனிடம் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரணைக்காக நவீனிடம் மொபைல் போனில் தொடர்பு கொண்ட போது, அவர் நாளை வருகிறேன், பணத்தை தருகிறேன் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். பின்னர் போலீசுக்கு பயந்து அங்குள்ள குடிசை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் தற்கொலை செய்வதற்கு முன்பாக மேலாளர் நவீன் பஞ்சாலா பால் நிறுவன அதிகாரிகள் மற்றும் தனது சகோதரி ஆகியோருக்கு மின்னஞ்சலில் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் தான் கையாடல் செய்த விவகாரம், தனது தற்கொலைக்கு யார் காரணம் போன்ற விவரங்களை அதில் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல இணை கமிஷனர் திசா மிட்டல் பால் நிறுவன அதிகாரிகள், கொளத்தூர் துணை ஆணையர் பாண்டியராஜன்,புழல் காவல் உதவி ஆணையர், மாதவரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் மற்றும் போலீசாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் மாதவரம் குற்ற பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி சென்னை மாநகர ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். பால் நிறுவனத்தில் ரூ.45 கோடி கையாடல் தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை செய்தது தொடர்பாக வந்த புகார் மீது மாநகர காவல் ஆணையர் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.