திருமலை: திருமலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்திகை வனபோஜன மஹோத்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். புனிதமான தெலுங்கில் வரும் கார்த்திகை மாதத்தையொட்டி, திருமலையில் உள்ள பார்வேட்டை மண்டபத்தில் நேற்று வனபோஜன மஹோத்சவம் நடந்தது. இதனையொட்டி மலையப்ப சுவாமி வாகன மண்டபத்தில் தங்குவதற்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து சிறிய கஜ வாகனத்தில் பார்வேட்டை மண்டபத்திற்கு ஊர்வலமாக சென்றார்.
அதேபோல் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ரங்கநாதர் மண்டபத்தில் இருந்து மற்றொரு பல்லக்கில் தாயார்கள் பார்வேட்டை மண்டபத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் அங்கு மலையப்ப சுவாமிக்கும், தாயார்களுக்கும் திருமஞ்சனம் நடைபெற்றது. இந்த வனபோஜன மஹோத்சவத்தை 16ம் நூற்றாண்டில் அன்னமாச்சார்யாவின் மூத்த மகனான திருமலாச்சார்யா செய்து வந்ததாக வரலாற்று சான்றுகள் உள்ளன. இருப்பினும், சில காரணங்களால், இந்த கார்த்திகை வனபோஜன மஹோத்சவம் நிறுத்தப்பட்டது.
சுமார் 500 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த இந்த உற்சவத்தை கடந்த 2010ம் ஆண்டில் தேவஸ்தானம் மீண்டும் தொடங்கியது. இருப்பினும் கடந்த 2020 முதல், கார்த்திகை மாதத்தில் மழை பெய்ததால், பர்வேட்டை மண்டபத்தில் கார்த்திகை வனபோஜன மஹோத்சவம் நடத்தப்படவில்லை. இந்நிலையில், 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பார்வேட்டை மண்டபத்தில் வனபோஜன மஹோத்சவம் ஏற்பாடு செய்யப்பட்டதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று இறைவனின் முன்னிலையில் உணவருந்தினர்.
இதில், இந்து தர்மபிரசார பரிஷத் மற்றும் அன்னமாச்சார்யா திட்டங்கள் சார்பாக தேவஸ்தானத்தின் பல்வேறு பக்தி இசை நிகழ்ச்சிகளும், ஹரிகதை சொற்பொழிவும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனையொட்டி கோயிலில் நடைபெறும் ஆர்ஜித சேவைகளான கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம் மற்றும் சஹஸ்ரதீப அலங்கார சேவைகள் ரத்து செய்யப்பட்டது.

