திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ள திருமலையில் விடிய விடிய மழை பெய்து வந்தது. புரட்டாசி மாதம் 3வது சனிக்கிழமை என்பதால் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பி சுமார் மூன்று கிலோமீட்டருக்கு ஆக்டோபஸ் கமாண்டோ பாதுகாப்பு படையினர் அலுவலகம் இருக்கும் கோகர்ம மனை வரை அமைக்கப்பட்டுள்ள நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.
இதனால் இலவச தரிசனத்திற்கு சுமார் 18 மணி நேரமும் 300 சிறப்பு நுழைவு தரிசனம் டிக்கெட்டுகளுக்கு 6 மணி நேரமும், சர்வ தரிசனம் டோக்கன் பெற்ற பக்தர்களுக்கு 8 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக பக்தர்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள நிழல் பந்தல்கள், மடங்களில் தங்கி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதே போன்று திருப்பதிலும் பல இடங்களில் மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழைநீரும், கழிவுநீரும் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது.