திருச்செந்தூர்: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்நிலையில் கோயிலில் கடந்த ஜூலை 7ம் தேதி கும்பாபிஷேகம் நடந்த பிறகு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் வார விடுமுறை நாட்களிலும், நாள்தோறும் அதிகாலையில் நடைபெறும் விஸ்வரூப தரிசனத்திலும் சுவாமி தரிசனம் செய்வது அதிகரித்துள்ளது.
இதை கருத்தில் கொண்டு கோயிலுக்கு வரும் பக்தர்கள் இரவில் கடற்கரை, கோயில் வளாகங்களில் தங்கி மறுநாள் அதிகாலையில் எழுந்து கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்கின்றனர். தற்போது கோயிலில் பெருந்திட்ட வளாகப்பணிகள் நடந்து வருகிறது. இதில் கோயில் வளாகமே புனரமைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கோயில் வளாகத்தில் ஆங்காங்கே மின் விளக்குகள், மின்விசிறி வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் இரவு நேரத்தில் கடற்கரையில் தங்குவதை தவிர்த்து கோயில் வளாகத்தில் தங்கிடுமாறு திருக்கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதன் பேரில் நேற்று முன்தினம் இரவு கடற்கரையில் தங்கி இருந்த பக்தர்களை தனியார் பாதுகாப்பு பணியாளர்கள் அங்கிருந்து கோயில் வளாகத்தில் தங்கிட செல்லுமாறு ஒலிபெருக்கியில் தெரிவித்தனர். இதையடுத்து பக்தர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு கோயில் வளாகத்தில் தங்கி நேற்று அதிகாலையில் சுவாமி தரிசனம் செய்தனர்.
* கடற்கரையில் இரவு தங்க தடை இல்லை காவல்துறை அறிவிப்பு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் இரவு, பகல் பாராமல் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வடகிழக்கு பருவமழை அல்லது திடீர் கனமழையின் காரணமாக அந்த நேரத்தில் மட்டும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் தங்குவதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கோயில் வளாகத்தில் பாதுகாப்பாக தங்குவதற்கு அறிவுறுத்தப்படுகிறது. எனவே தற்போது கடற்கரை பகுதியில் தங்குவதற்கு எந்தவிதமான தடையும் அறிவிக்கப்படவில்லை என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

