நெல்லை: விண்ணை முட்டும் அரோகரா கோஷத்துடன் திருச்செந்தூர் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்தார். தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா கடந்த அக். 22ம்தேதி காலை யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. விழா நாட்களில் கோயில் அதிகாலை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. மேலும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி, கிரிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார விழாவை முன்னிட்டு கோயில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 1 மணிக்கு சாயராட்சை தீபாராதனை நடந்தது. தொடர்ந்து தற்போது திருக்கோயில் கடற்கரையில் சூரபத்மன் கஜமுகனை முருகப்பெருமான் வதம் செய்தார். இரண்டாவதாக சிங்க முகம் கொண்ட சிங்கமுகாசுரனை ஜெயந்திநாதர் வதம் செய்தார். அதனை தொடர்ந்து சூரபத்மனை ஜெயந்திநாதர் வதம் செய்தார்.
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் வந்து பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர். இதனால் திருக்கோயில் வளாகமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. பாதுகாப்பு பணியில் தூத்துக்குடி எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ்குமார் உள்ளிட்ட சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர், கடலோரக் காவல்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சூரசம்ஹார நிகழ்ச்சிகளை நேரலையில் பார்ப்பதற்காக எல்இடி டிவிக்கள் வைக்கப்பட்டுள்ளன.
பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு பஸ்கள் மற்றும் நெல்லை மார்க்கமாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. நகரின் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வாகன நிறுத்துமிடங்களில் இருந்து 25 சர்குலர் பேருந்துகள் மூலம் பக்தர்கள் கட்டணமின்றி நகருக்குள் வந்து செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருக்கல்யாணம்
நாளை (அக். 28) திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு கோயில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று, அதிகாலை 5.30 மணியளவில் தெய்வானை அம்மன் தபசு காட்சிக்கு புறப்பாடும், மாலை 6.30 மணியளவில் சுவாமி, அம்மன் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சியும், இரவு திருக்கோயிலில் வைத்து திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது.
