திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான சரவணப்பொய்கை குளம் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. அதனை விரைவில் பக்தர்கள் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அழகிய கடற்கரையோரம் அமைந்துள்ளது. இதனால் இங்கு வரும் பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு போன்ற புண்ணிய தீர்த்தங்களில் நீராடி சுவாமியை வழிபடுகின்றனர். அதேபோல இக்கோயிலில் பிரசித்தி பெற்ற வள்ளியம்மன் குகை கோயிலையும் பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர். இதைத்தாண்டி கோயிலில் சரவணப் பொய்கை குளத்தையும் பக்தர்கள் பார்த்து வருகின்றனர்.
அதேபோல சரவணப் பொய்கையில் கோயில் யானை தெய்வானை குளிப்பதற்கு நீச்சல் குளமும் உள்ளது. தற்போது கோயிலில் ரூ.300 கோடி செலவில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சரவணப் பொய்கை குளமும் நீண்ட காலத்திற்குப் பிறகு தற்போது புனரமைக்கப்பட்டுள்ளது. குளத்தில் உள்ள தாமரைப்பூ, கார்த்திகை பெண்கள் போன்ற சிற்பங்கள் புனரமைக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. இன்னும் சில தினங்களில் பக்தர்கள் சரவண பொய்கை குளத்தை பார்வையிடுவதற்கு அனுமதி அளிக்கப்பட உள்ளதாக திருக்கோயில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.