Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சட்டவிரோத தரிசன டிக்கெட் விற்பனை தடுக்க நடவடிக்கை: காவல்துறை, அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் சட்டவிரோத தரிசன டிக்கெட் விற்பனையை தடுத்து முறைப்படுத்த காவல்துறை, அறநிலையத்துறை இணைந்து நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. சென்னையை சேர்ந்த சண்முகராஜன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் நிர்வாகம் தரப்பில் சிறப்பு தரிசன டிக்கெட் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது. கோயில் இணையதளத்திலும் டிக்கெட்டுகளை பெறலாம். கடந்த ஜூலை 26ம் தேதி நான் கோயிலுக்கு சென்றபோது, பக்தர்களுக்கான வழிகள் முறைப்படுத்தப்படவில்லை. ஆன்லைன் தவிர சிறப்பு தரிசன கட்டண டிக்கெட் விற்கப்படுவதாக கூறப்பட்ட நிலையில் அதனைப் பெற்றுக்கொண்டு ஏராளமான பக்தர்கள் அங்கீகரிக்கப்படாத வழிகளில் கோயிலுக்குள் நுழைய முயன்றனர்.

இதனால், ஆன்லைன் மூலம் முறையாக விண்ணப்பித்து சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். கோயிலால் அங்கீகரிக்கப்படாத சில நபர்கள் பூசாரிகள் எனும் பெயரில் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் பக்தர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. எனவே, இக்கோயிலில் தரிசன நுழைவு கட்டணத்தை முறைப்படுத்தவும், அங்கீகரிக்கப்படாத நபர்கள், புரோக்கர்கள் டிக்கெட் விற்பனை என்ற பெயரில் பணம் வசூலிப்பதை தடுக்கத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஜி.அருள்முருகன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், கோயிலில் திரிசுதந்திரர்கள் தரிசன டிக்கெட் விற்பனை செய்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ‘‘பக்தர்கள் கோயிலுக்கு வருவது நிம்மதியை தேடியே. அங்கும் சட்ட விரோத செயல்கள் நடைபெறுவதை ஏற்க இயலாது. இந்த வழக்கில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி எதிர்மனுதாரராக சேர்க்கப்படுகிறார். திருச்செந்தூர் கோயிலில் சட்ட விரோத தரிசன டிக்கெட்டுகள் விற்பனையை தடுத்து முறைப்படுத்த அறநிலையத்துறை மற்றும் காவல்துறை இணைந்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைதியான முறையில் பக்தர்கள் தரிசனம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். மனுவிற்கு அறநிலையத்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தனர்.