Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத் தேர் வீதியுலா திடீர் ரத்து

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பெருந்திட்ட வளாகப்பணிகள் காரணமாக இன்று முதல் தங்கத்தேர் உலா தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாள்தோறும் மாலை 6 மணியளவில் தங்கத்தேர் கிரிப்பிரகாரம் சுற்றிவருகிறது. இந்த தேரில் வள்ளி, தேவசேனா அம்மனுடன் எழுந்தருளியிருக்கும் சுவாமி ஜெயந்திநாதரை பக்தர்கள் ரூ.2500 கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து தேர் இழுத்து வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். தற்போது கோயிலில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக வரும் கந்தசஷ்டி திருவிழாவுக்கு முன்பு கோயிலின் வடக்கு மற்றும் கிழக்கு பிரகார தரைத்தள பணிகள் நடைபெற உள்ளது. திருவிழாவுக்கு பிறகு கோயிலின் தெற்கு மற்றும் மேற்கு பிரகார தரைத்தளம் பணிகள் நடைபெறுகிறது. இந்த பணிகளுக்காக இன்று முதல் தங்கத்தேர் உலா தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது.

பணிகள் முடிவுற்ற பின் தங்கத்தேர் உலா நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்திருந்தது. நேற்று விசாக நட்சத்திரம் மற்றும் செவ்வாய்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே நாழிக்கிணறு மற்றும் கடலில் புனித நீராடி இலவச பொது தரிசனம், ரூ.100 கட்டண தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள் வழியில் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று ஒரே நாளில் 16 பக்தர்கள் தங்கத்தேர் இழுத்து வேண்டுதல் நிறைவேற்றினர்.