தரையிறங்கும்போது டயர்கள் உராய்ந்து புகை சரக்கு விமானம் தீப்பிடித்து எரிந்ததாக திடீர் வதந்தி: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
சென்னை: மலேசியாவில் இருந்து சென்னை வந்த தனியார் சரக்கு விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையில் விமான டயர்கள் உராய்ந்து ஏற்பட்ட புகையால் விமானம் தீப்பிடித்து எரிந்ததாக வதந்தி பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோலாலம்பூரில் இருந்து தனியார் சரக்கு விமானம் ஒன்று, நேற்று அதிகாலை 4 மணிக்கு சென்னை பழைய விமான நிலைய சரக்கு விமான பகுதிக்கு வந்து தரை இறங்கியது. அந்த விமானம் தரை இறங்கும்போது, விமானத்தின் டயர்கள் ஓடுபாதையில் உராய்ந்து, வழக்கத்தை விட அதிகமாக புகை எழும்பியது.
இதையடுத்து சென்னை விமான நிலைய தீயணைப்புத் துறையினர், விமானத்தை முழுமையாக பரிசோதித்தனர். டயர்களையும் ஆய்வு செய்தனர். ஆனால் விமானத்தில் தீப்பிடிப்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை. விமானம் வந்து நின்றபோது, விமானத்தின் டயர்கள் ஓடுபாதையில் அழுத்தமாக உராய்ந்து கொண்டு ஓடியதால், புகை எழும்பியுள்ளது. இது வழக்கமாக நீண்ட தூரம் விமானங்கள் மற்றும் சரக்கு விமானங்கள் வந்து தரையிறங்கும் போது ஏற்படுவது வழக்கம் என்று விமான பொறியாளர்கள் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து விமானத்தில் தீ விபத்து எதுவும் நடக்கவில்லை. அதற்கான அறிகுறிகளும் இல்லை என்று கூறிவிட்டு தீயணைப்பு துறையினர் திரும்பி சென்றனர். அதேபோல், விமான பாதுகாப்பு அதிகாரிகள் சரக்கு விமானத்தை முழுமையாக ஆய்வு செய்து விட்டு அவர்களும், விமானம் முழு பாதுகாப்பாக உள்ளது என்பதை உறுதி செய்தனர்.
ஆனால் சென்னை விமான நிலையத்தில் சரக்கு விமானம் தீ பிடித்ததாகவும், அந்த தீயை விமான நிலைய தீயணைப்பு வண்டிகள் வந்து அணைத்ததாகவும் தவறான தகவல் பரவி சென்னை விமான நிலைய பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தவறான தகவல் எப்படி வெளியானது என்று அதிகாரிகள் மட்டத்தில் தீவிர விசாரணை நடக்கிறது.