Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திண்டிவனத்தில் வன்னியர் சங்க அலுவலகத்துக்கு பூட்டு ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்கள் மோதல்

திண்டிவனம்: திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்துக்கு உரிமை கோரி ராமதாஸ், அன்புமணி தரப்பு கோஷ்டிகள் திடீரென மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், மயிலம் சாலையில் வன்னியர் சங்க அலுவலகம் உள்ளது. வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 தியாகிகளுக்கு இங்கு செப். 17ம்தேதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெறும். இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ஆகியோர் 21 தியாகிகளின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மெழுகுவர்த்தி ஏற்றி மரியாதை செலுத்துவார்கள்.

நேற்று முன்தினம் அன்புமணியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி ராமதாஸ் அதிரடியாக உத்தரவிட்டார். இதனிடையே வருகிற 17ம்தேதி அங்கு அஞ்சலி செலுத்த அன்புமணி வருகை தர முடிவெடுத்த நிலையில், அவரது ஆதரவு மாவட்ட செயலாளரான சங்கர் திண்டிவனம் நகர காவல் நிலையத்தில் அனுமதி கோரி மனு அளித்தார்.  இதுகுறித்து தகவல் கிடைக்கவே நேற்று ராமதாஸ் தரப்பு மாவட்ட செயலாளரான ஜெயராஜ் தலைமையில் ஒன்றுகூடி வன்னியர் சங்க அலுவலகத்துக்கு மாற்றுப் பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதை அங்கிருந்த அன்புமணி ஆதரவாளர்கள் தட்டிக் கட்கவே, இருதரப்பும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கைகலப்பு ஏற்படும் சூழல் உருவாகவே, அங்கு முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இரு தரப்பினரையும் திண்டிவனம் காவல் நிலையத்துக்கு அழைத்து சமாதானம் பேசினார். இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில் திண்டிவனம் டிஎஸ்பி அலுவலகத்துக்கு இரு தரப்பினரையும் தனித்தனியாக அழைத்த டிஎஸ்பி பிரகாஷ் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அப்போது அங்கு வந்த மயிலம் எம்எல்ஏ சிவகுமாருக்கு எதிராக ராமதாஸ் ஆதரவாளர்கள் திடீரென கோஷம் எழுப்பினர். எம்எல்ஏ சிவகுமார் ஒழிக... ராமதாஸ் ஆதரவில் எம்எல்ஏவாகி அவரையே எதிர்க்கிறாயா? என முழக்கமிடவே பரபரப்பு ஏற்பட்டது. இருதரப்பும் மீண்டும் மோதிக் கொள்ளும் சூழல் உருவாகவே, டிஎஸ்பி இருதரப்பையும் சமாதானப்படுத்தினார். இதனிடையே வன்னியர் சங்கம் இயங்கும் அலுவலக கட்டிடத்தின் உரிமையாளரான பாஜவை சேர்ந்த செந்தில் என்பவர் அன்புமணி தரப்பு அதனை பயன்படுத்திக் கொள்ள எழுத்துப்பூர்வமாக நேரில் டிஎஸ்பியிடம் கடிதம் அளித்தார்.

இதற்கு ராமதாஸ் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே தங்களுக்கு வாடகைக்கு விடப்பட்ட இடத்தை எப்படி திடீரென உரிமையாளர் மாற்றியமைக்க முடியும் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக டிஎஸ்பி உறுதி அளித்தபிறகே இருதரப்பினரும் அங்கிருந்து முழுமையாக கலைந்து சென்றனர். இந்நிலையில், நேற்று மாலை ஏடிஎஸ்பி தினகரன், டிஎஸ்பி பிரகாஷ் தலைமையிலான போலீசார் மற்றும் மண்டல துணை தாசில்தார் பச்சையம்மாள் ஆகியோர் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ராமதாஸ் தரப்பில் மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்பட 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகளும், அன்புமணி சார்பில் மயிலம் எம்எல்ஏ சிவக்குமார், முன்னாள் எம்எல்ஏ கணேஷ்குமார் மாவட்ட செயலாளர் சங்கர் உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.  அப்போது அன்புமணி தரப்பினர் வன்னியர் சங்க அலுவலக பூட்டை உடைக்க சென்றனர். அதற்கு ராமதாஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கவே மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து இருதரப்பினரும் மீண்டும் காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டனர்.

இடத்தின் உரிமையாளரே ஆட்சேபனை இல்லை என எழுதிக் கொடுத்துள்ளதால், போலீசாரே பூட்டை திறந்துவிட அன்புமணி தரப்பு வலியுறுத்தியது. ஆனால் வருவாய்த் துறை அதிகாரிகள், உரிய ஆவணங்களை ஆராய்ந்த பிறகே பூட்டை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படுமென அறிவுறுத்தினர். இதற்கு அன்புமணி தரப்பு ஒப்புக் கொள்ளாத நிலையில் 100க்கும் மேற்பட்டோர் அங்கேயே தொடர்ந்து காத்திருப்பதால் பரபரப்பு நீடிக்கிறது.

இதனிடையே அன்புமணி தரப்பிலும் தனியாக ஒரு பூட்டுபோட முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. இதையடுத்து வன்னியர் சங்கம் அலுவலகம் அருகே 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் நகரின் முக்கிய பகுதி, ராமதாஸ் இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

* வன்னியர் சங்கத்துக்கு சீல்

ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்கள் மோதல் தொடர்பாக அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டாததால், வன்னியர் சங்க அலுவலகத்துக்கு ராமதாஸ் தரப்பினர் போட்ட பூட்டை அகற்றி, வருவாய் துறை அதிகாரிகள் புதிய பூட்டை போட்டு சீல் வைத்து தங்களது கட்டுப்பாட்டில் அலுவலகத்தை கொண்டுவந்தனர்.