Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புலிகளை பாதுகாப்பதன் வழியே காடுகளின் ஆன்மாவை பாதுகாக்கிறோம்: முதல்வர் பதிவு

சென்னை: உலக புலிகள் தினத்தையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:  உலக புலிகள் நாளில் தமிழ்நாடு பெருமிதத்துடன் முழங்குகிறது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய தரவுகளின்படி, 306 புலிகளைக் கொண்டுள்ளது தமிழ்நாடு. இந்த வெற்றிக்கு காரணம், கடினமான பகுதிகளில், முக்கியத்துவம் மிகுந்த புலிகளின் வாழிடங்களை பாதுகாக்கும் நமது வனத்துறை பணியாளர்களும், வேட்டை தடுப்பு அணியினரும்தான்.  வனங்களை பாதுகாக்கும் பணியினை மேம்படுத்திட, 1,947 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

வனத்துறையினருக்கு நவீன உடைகள், தொழில்நுட்பக் கருவிகள் வழங்கப்படுகின்றன. கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், அயல் - ஆக்கிரமிப்பு தாவரங்களை அகற்றி, புலிகளின் வாழிடங்கள் மீளுருவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. காடுகளின் வளம் மேம்படுத்தப்படுகிறது. கானுயிர் மீதான குற்றங்கள் புரியும் கும்பல்களை அடக்க, தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரினக் குற்றங்கள் கட்டுப்பாட்டுப் பிரிவு எனும் சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. புலிகளைப் பாதுகாப்பதன் வழியே, நம் காடுகளின் ஆன்மாவை நாம் பாதுகாக்கிறோம். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.