சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று இருந்த 65 லட்சம் பேர், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் கணக்கீட்டின்படி 36 லட்சம் வாக்காளர்கள் நிரந்தரமாக பீகாரில் இருந்து வேறு மாநிலங்களுக்கு இடம் மாறி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. பீகாரில் இருந்து வெளி மாநிலங்களுக்கு குடி பெயர்ந்தவர்கள் பெயர்கள் அங்குள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
அவர்கள் எந்த மாநிலத்தில் தொகுதிக்குட்பட்ட பகுதியில் வசிக்கிறார்களோ, அங்கு தனது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இந்த அடிப்படையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சுமார் 6.5 லட்சம் பேர் தமிழகத்தில் வேலைக்காக வந்து தங்கி இருக்கிறார்கள். அவர்களது பெயர்கள் பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதால், இனி அவர்கள் தங்கள் பெயரை தமிழகத்தின் வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ளலாம். இவ்வாறு நடந்தால் தமிழக வாக்காளர் பட்டியலில் வெளி மாநிலத்தவர் எண்ணிக்கை மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் சுமார் 10 சதவீதத்துக்கும் அதிகமாகும். தமிழ்நாட்டை குறி வைத்திருக்கும் பாஜ, வாக்காளர் பட்டியலில் இத்தகைய ஏற்பாடுகளை செய்து தேர்தலில் ஆதாயம் அடைய முயற்சிப்பதை வேடிக்கைப் பார்க்க முடியாது. தலைமைத் தேர்தல் ஆணையம் வெளிமாநிலத்தவரை தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் முயற்சிகளை முறியடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.