தி,மலை கார்த்திகை தீப திருவிழா.. பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, சண்டிகேஸ்வரர் எழுந்தருளினார் : கொட்டும் மழையில் பக்தர்கள் கிரிவலம்!!
திருவண்ணாமலை : கார்த்திகை தீப விழா நடைபெறும் திருவண்ணாமலையில் தற்போது மிதமான மழை பெய்து வருகிறது. மழை பெய்து வரும் நிலையில் திருவண்ணாமலையில் குடையுடன் பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். இன்று மாலை 6 மணி அளவில் அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படவுள்ளது. மகா தீபம் ஏற்றுவதற்கான 5 அடி உயரமும், 300 கிலோ எடையும் கொண்ட கொப்பரை நேற்று சிறப்பு பூஜை செய்யப்பட்டு மலையின் உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது.அதேபோல் தீபம் ஏற்றுவதற்கு காடா துணியிலான திரியும், 300 கிலோ நெய்யும் தயாராக இருக்கின்றன. கடந்த ஆண்டை தொடர்ந்து இந்த ஆண்டும் பக்தர்கள் மலையேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் உள்ள தீப தரிசன மண்டபத்தில் மாலை 5 மணியளவில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளல் நடைபெற்றது. கொடி மரம் முன்பு சண்டிகேஸ்வரர் எழுந்தருளினார். மகா தீபம் ஏற்றப்படுவதற்கு முன்பு, உண்ணாமலையார், பராசக்தி அம்மன் ஆகியோர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாலை 5.58 மணிக்கு, கோயில் கொடிமரம் முன்பு ஆனந்த தாண்டவத்துடன் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி காட்சியளிப்பார் அப்போது, கொடிமரம் முன்பு அகண்டத்தில் தீபம் ஏற்றியதும், மிகச்சரியாக மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் அண்ணாமலையாரின் ஜோதி வடிவமான ‘மகா தீபம்’ ஏற்றப்படும்.

