கோவை: கோவை அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்டுவின்ஸ் வரை 10.1 கிலோ மீட்டர் தொலைவிற்கு மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம் கடந்த வியாழக்கிழமை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணி அளவில் உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்டுவின்ஸ் நோக்கி அதி வேகமாக சென்ற கார், பாலத்தில் இருந்து இறங்கியபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் நின்றிருந்த லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இதில் கார் முழுமையாக லாரியின் அடியில் சிக்கி அப்பளம் போல நொறுகியது. இதில் காரில் பயணித்த இளம்பெண் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து, பீளமேடு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் வந்து பொக்லைன் இயந்திரம் மூலம் காரை வெளியே எடுத்தனர். சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன.
கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து நடத்திய விசாரணையில் காரில் பயணித்தவர்கள் ஒண்டிப்புதூரை சேர்ந்த அசன் மகன் ஹாரிப் (20) மற்றும் அவரது நண்பர் சேக் பஷிர் மகன் சேக் உசைன் (20) மற்றும் செல்வபுரத்தை சேர்ந்த பிரகாஷ் மகள் சத்ய பிரியா (17) என்பது தெரியவந்தது. அதில் ஹாரிப் பெரிய கடை வீதியில் உள்ள துணிக்கடையிலும், சேக் பஷிர் டிரைவராகவும் பணிபுரிந்துள்ளனர். சத்ய பிரியா கல்லூரியில் படித்து கொண்டு ஹாரிப் வேலை செய்த துணிக்கடையின் அருகில் உள்ள மற்றொரு துணிக்கடையில் பகுதி நேரமாக வேலை செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.