மூன்றுக்கு ஒன்று ப்ரீ டீல் ஓ.கே.வால் குஷியில் இருக்கும் பெண் தொழிலதிபர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘நாட்டின் பிரபல மருத்துவமனையில் ஒன்றான ஜிப்மரில் மருத்துவ மாணவருக்கே புதிய மனநல மையம் உருவாக்கப்பட்டு இருக்காமே..’’ என கேள்வியை தொடங்கினார் பீட்டர் மாமா.
‘‘தென் மாநில மக்களின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதில் தமிழகத்தை ஒட்டிய யூனியனில் உள்ள ஜிப்மர் முக்கிய பங்கு வகிக்கிறதாம்.. தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் உள், வெளி சிகிச்சைக்கு வருகிறார்களாம்.. பல மாநிலத்தவர் சிகிச்சைக்கு வருவதால் அங்கு பணிபுரியும் மருத்துவர்களும் பல மொழி, இனம் நிறைந்த கலவையாக உள்ளார்களாம்.. நிலைமை இப்படியிருக்க மருத்துவ மாணவர்களின் மனநலனை பாதுகாக்கும் வகையில் தற்போதைக்கு புதிய மையம் ஒன்னு ஜிப்மரிலேயே உருவாக்கப்பட்டு இருக்காம்.. ஜெ-கேர்ஸ்செல் எனும் பெயரிலான அந்த பிரத்யேக மையத்தில் சிட்டிங் மாணவர்களுக்கு மன நலம் தொடர்பான ஆலோசனை இனி வழங்க போறாங்களாம்.. அதாவது கல்வி, அறுவை பயிற்சியால் மட்டுமல்ல, தனிப்பட்ட விவகாரங்களால் டிப்ரஷனில் தத்தளிப்பவர்களை மீட்டெடுக்கவும் இதை பலதுறை நிபுணர்களை கொண்ட குழு வழி நடத்த இருக்காம்.. ரகசியம் காத்து எளிய தீர்வுக்காக 24 மணிநேர இ-மெயில், புகார் பெட்டி வாசல்கள் திறந்திருக்குமாம்.. தற்போதைக்கு யூனியன் வட்டாரத்தில் லேட்டஸ்ட் புலம்பல் இதுதானாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தேர்தல் நெருங்கும் நேரத்தில்தான் அணி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களின் நினைப்பு புல்லட்சாமிக்கு வந்திருப்பதாக பேச்சு ஓடுகிறதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘யூனியனில் தேர்தல் நெருங்கியதும், தொண்டர்கள் பற்றிய நினைப்பு வந்திருக்கிறதாம் புல்லட்சாமிக்கு.. என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் வாட்ஸ் அப் குழுவில், மாநில நிர்வாகி இதுதொடர்பாக ஒரு பதிவு போட்டிருக்கிறாராம்.. அதில் மக்களுக்கு நாளும் உழைத்த நமது தலைவர் இனி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் திரளாக திரண்டு வந்து மாஸ் காட்ட வேண்டும் என அழைப்பு விடுத்தாராம்.. ஆனா ஒருத்தரிடம் கூட ரெஸ்பான்ஸ் இல்லையாம்.. என்ன என்று விசாரித்தபோது, கட்சிக்கு எப்போதும் இல்லாத வகையில் பல்வேறு அணி தலைவர்கள், தொகுதி தலைவர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்களாம்.. ஆனால் இதில் முக்கிய அணியின் நிர்வாகி பெயர்கூட புல்லட்சாமிக்கு தெரியாதாம்.. ஒருமுறை அணி தலைவர்கள் வாழ்த்துபெற சட்டசபை இருக்கும் முதல்வர் அறைக்கு சென்றார்களாம்.. நான் கட்சியின் ஒரு அணியில் தலைவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, உள்ளே நுழைய முயன்றாராம்.. உடனே கேட்டைப்போட்டு, நீ யாரா வேணா இரு, இப்போதைக்கு அனுமதியில்லை, கிளம்பு என்று சொல்லி இருக்கிறார்கள்.. இதேபோல் பலரும் சாமியை பாக்க போய் இதே அனுபவம் ஏற்பட்டுள்ளதாம்.. அதே நேரத்தில் பூங்கொத்துடன் நிற்கும் கோட்டு சூட்டுக்கும் உடனே அனுமதி கிடக்கிறதாம்.. இதை பார்த்து வெறுத்துப்போன நிர்வாகிகளோ, மாநில நிர்வாகியின் பதிவுக்கு பதில் போடவில்லையாம்.. இப்போ மட்டும் தொண்டர்களும், நிர்வாகிகளும் கண்ணுக்கு தெரியுறாங்களா என கேள்வி எழுப்புகின்றனராம்.. இதுபற்றிதான் யூனியன் முழுக்க பரவலாக பேச்சு..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தனக்கு கிடைக்கிறதோ இல்லையோ வாரிசுக்காவது சீட் வாங்கிடணும்னு மாஜி அமைச்சர் ஒருவர் பாதி நாள் தலைநகருக்கும், மீதி நாள் சேலத்து பக்கமும் சுற்றி வர்றாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘லிங்கசாமியின் பெயர் கொண்ட நதி மாவட்டத்தில் தலைநகரத்து தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏவான முருக கடவுளின் பெயரைக் கொண்டவருக்கு மீண்டும் சீட் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்.. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் மாஜி அமைச்சரான மீசைக்காரருக்கு எதிராக அரசியல் செய்து அவருக்கு சீட் கிடைக்கவிடாமல் தடுத்ததுடன், தனக்கு சீட் வாங்கி சிட்டிங் எம்எல்ஏவாகவும் இருக்காரு.. கடந்த நான்கரை ஆண்டுகளாக மீசைக்காரருக்கு எதிரான அரசியல் செய்து, அவரை கட்சி பணிகளில் ஈடுபடமுடியாத அளவிற்கு ஓரங்கட்டிவிட்டார்.. ஆனால், மீசைக்காரரோ தனது கோஷ்டி அரசியலால் சிட்டிங்கிற்கு ரொம்பவே ‘டப்’ கொடுத்து வந்தார். அதே நேரம் கட்சியினரும் மீசைக்காரருக்கு ஆதரவாக உள்ளார்களாம்.. இதனால், இந்த முறை எப்படியாவது தனக்கு சீட் வாங்கிவிட வேண்டும். இல்லாவிட்டால் தனது வாரிசுக்காவது சீட் வாங்கி தனது அரசியலை மீண்டும் முன்னெடுக்க வேண்டுமென ஆதரவாளர்களிடம் மீசைக்காரர் கூறி வருகிறாராம்.. இதனால் மாதத்தின் பாதி நாள் தலைநகரிலும், சேலத்து பக்கமும் போய் வருகிறாராம்.. இதனால் சீட் ரேஸில் இருவரும் வேகமெடுத்து சுற்றி வருகின்றனராம்.. இலைக்கட்சியின் நிலை இப்படி இருக்க, இந்த முறை எப்படியாவது தலைநகரத்து தொகுதியை கைப்பற்றிவிட வேண்டுமென மலராத கட்சியினரும் தீவிரமாய் ஈடுபட்டுள்ளனராம்.. மலராத கட்சியினர் பிடிவாதமாக இருந்தால் இந்த தொகுதி தங்களை கைவிட்டு போகும் என்பதால் இலைதரப்பினர் அப்செட்டாகி உள்ளனராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மான்செஸ்டர் மாநகரில் வடக்கு தொகுதியை குறி வைத்து களம் இறங்குகிறாராமே பெண் தொழிலதிபர் தெரியுமா..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மான்செஸ்டர் மாநகரில் மூன்றெழுத்து பெயர் கொண்ட ஒரு அரசியல் கட்சியில், நான்கெழுத்து பெயர் கொண்ட ஒரு பெண் தொழிலதிபர் கோலோச்சிட்டு இருக்காராம்.. கோவை மண்டலத்தை பொறுத்தவரை நான்தான் எல்லாம்... என அக்கட்சி நிர்வாகிகளிடம் மார்தட்டி வருகிறாராம்.. கட்சியின் மேலிடமும் இவருக்கு கிரீன் சிக்னல் கொடுத்து விட்டதாம்.. அதனால், அவர், இம்முறை நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் கோவை வடக்கு தொகுதியை ‘குறி’ வைத்து, களம் இறங்க உள்ளாராம்.. இதற்காக, கட்சியின் மேலிட அனுமதியை இப்போதே பெற்றுவிட்டாராம்.. அப்படி கட்சியின் மேலிடம் அனுமதி கொடுக்கும்போது, ‘நீங்கள் வடக்கு தொகுதியை தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள்.. அதேநேரம், கோவை தெற்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களுக்கான செலவுகளையும் நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.. இந்த டீல் ஓ.கே.வா?’ என கேட்டாங்களாம்.. அதற்கு இவரும் ஓ.கே. என சொல்லி விட்டாராம். அதனால், நான் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட போவது உறுதி.. என்னைப்போலவே பிற கட்சியிலும் பெண் வேட்பாளர்களைத்தான் நிறுத்துவார்கள்.. அப்போது நான் ஒரு கை பார்த்துவிடுவேன் என ரொம்பவே குஷியில் இருக்கிறாராம் பெண் தொழிலதிபர்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.
