Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அச்சுறுத்தும் விதமாக மிரட்டல் எடப்பாடி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்: 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் எஸ்பியிடம் புகார்

மதுரை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சார்பில் எஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் இருளாண்டி தலைமையில் ஏராளமானோர் மதுரை மாவட்ட எஸ்பி அரவிந்த்திடம் நேற்று புகார் மனு அளித்தனர்.

மனுவில்,‘வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி 18ம் தேதி பிரசாரம் செய்தார். அப்போது, அந்த வழியாக 108 ஆம்புலன்ஸ் சென்றது. அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் நோயாளியை ஏற்றுவதற்காக சென்று கொண்டிருந்தார். இதனால், அதிமுக பிரசார கூட்டத்தின் நடுவே நெரிசலில் சிக்கிக் கொண்டது.

இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி ஓட்டுநரை பார்த்து ஆளில்லாமல் ஆம்புலன்ஸை கொண்டு வருகிறார்கள். இனிமேல் கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் வந்தால் வாகனத்தை இயக்கி வரும் ஓட்டுநரை, நோயாளியாக மாற்றி விடுவோம் என அச்சுறுத்தும் விதமாக மிரட்டல் விடுத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது வன்முறை தடுப்பு மற்றும் உடமை சேதாரம் தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என கூறியுள்ளனர். மாநில பொதுச்செயலாளர் இருளாண்டி கூறுகையில்,‘108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை தவறாக பேசியதற்காக எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால், தமிழ்நாடு முழுவதும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஒன்றுதிரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவர்,’என்றார்.