Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தும் நுட்பமான வழிகள்!

விளைச்சலுக்கு வில்லங்கம் வைக்கும் நூற்புழுக்கள் என்ற தலைப்பில் நூற்புழுக்கள் குறித்தும், அவற்றால் பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்மைக் கல்லூரியைச் சேர்ந்த கவிதா, திருச்செந்தூர செல்வி, திலகம் ஆகியோர் பகிர்ந்துகொண்ட தகவல்களை கடந்த இதழில் பார்த்தோம். நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து இந்த இதழில் காண்போம். சாகுபடிக்கு தெரிவு செய்யப்பட்ட வயலை கோடை காலத்தில் ஏப்ரல் முதல் மார்ச் வரை ஆழ உழவு செய்வது அவசியம். இவ்வாறு உழவு செய்வதன் மூலம் வயலில் உள்ள நூற்புழுக்கள் மற்றும் அவற்றின் முட்டைகள், அவற்றுடன் கூடிய வேர்த்துண்டுகள் மேற்பரப்பிற்கு கொண்டு வரப்பட்டு சூரிய வெப்பக் கதிர்வீச்சுகளால் அழிக்கப்படுகின்றன. காய்கறி பயிர்களை தாக்கக்கூடிய வேர்முடிச்சு நூற்புழுக்களை கோடை உழவு செய்வதனால் சிறப்பாக கட்டுப்படுத்தலாம். அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றவாறு பயிரிடப்படும் பயிர்களுள் நூற்புழுவிற்கு உகந்த மற்றும் ஒவ்வாத பயிர்களை சுழற்சி முறையில் பயிரிடுவதன் மூலம் நூற்புழுக்களை மிகச் சிறப்பாக கட்டுப்படுத்தலாம். இம்முறையின் மூலம் நூற்புழுக்கள் தங்களுக்கு தேவையான இரைச்செடி கிடைக்காமல் அழிகின்றன.

காய்கறி பயிரை அடுத்து தானியப்பயிரையோ அல்லது வேறு பயிர்களையோ சுழற்சி முறையில் பயிரிடுவதன் மூலம் வேர்முடிச்சு நூற்புழு மற்றும் நெற்பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்கள் கட்டுப்படுத்தப்படும். உருளைக்கிழங்கிற்கு பிறகு முட்டைக்கோசு, பூக்கோசு போன்றவற்றை பயிரிடுவதன் மூலம் உருளைக்கிழங்கை தாக்கும் முட்டைக்கூடு நூற்புழுக்களை வெகுவாக கட்டுப்படுத்தலாம். கவர்ச்சிப் பயிர்களான கேந்தி அல்லது செண்டுமல்லி போன்ற பயிர்களின் வேர்க்கசிவுகள் நூற்புழுக்களை அழிக்கும் வல்லமை பெற்றவை. இத்தகைய செடிகளை தனிப்பயிராகவோ அல்லது ஊடுபயிராகவோ சாகுபடி செய்வதன் மூலம் நூற்புழுக்களை கட்டுப்படுத்தலாம். இதுபோன்றே கடுகுச் செடியினைப் பயிரிட்டு உருளைக்கிழங்கைத் தாக்கும் முட்டைக்கூடு நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம். தாவர நூற்புழுக்களை நுண்ணிய உயிரினங்களான பாக்டீரியா (பாஸ்சூரியா பெனிட்ரன்ஸ்), பூஞ்சாணங்கள் (டிரைகோடெர்மா விரிடி, பொக்கோனியா கிளாமிடோஸ்போரியா, வேர் உட்பூசணம்) மற்றும் ஆக்டினோமைசிட்ஸ் (ஸ்ட்ரோப்டோமைசஸ் அவர்மெட்டிலிஸ்) போன்றவற்றின் மூலம் பெருமளவில் கட்டுப்படுத்தி பயிர் விளைச்சலை அதிகரிக்கலாம்.