சென்னை : தோழி விடுதி கட்ட தடை கோரிய வழக்கை, 10,000 ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணிபுரியும் மகளிருக்காக குறைந்த கட்டணத்தில் அனைத்து வசதிகளையும் கொண்ட தோழி விடுதிகளை கட்டமைத்து வருகிறது. அந்த வகையில் சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள இராமானுஜம் கணித ஆராய்ச்சி நிறுவனத்தின் பின்புறத்தில் மாணவிகள் விடுதி அமைந்துள்ள இடத்தில், பணிபுரியும் பெண்களுக்கான தோழி விடுதி கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், விடுதி கட்டும் பணிக்கு தடை விதிக்கக்கோரி, பல்கலைக்கழக முதுகலை மாணவர் நவீன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.அதில், விடுதி கட்டுமான பணி காரணமாக மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், விடுதி கட்டும் பணியை கைவிடக்கோரி மனு அளிக்கப்பட்டதாகவும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, இது போன்ற தேவையற்ற மனுக்களை தாக்கல் செய்வதை கைவிட்டு சம்பந்தப்பட்ட மாணவர், படிப்பில் கவனம் செலுத்த வேண்டுமென அறிவுறுத்தி, 10,000 ரூபாய் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.