தூத்துக்குடி: தூத்துக்குடி விமானநிலையம் ரூ.452 கோடி செலவில் 886 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தில் 3 ஆயிரத்து 115 மீட்டர் நீளம் கொண்ட ரன்வே, இரவு நேரத்தில் விமானம் தரையிறங்குவதற்கான வசதிகள், ஒரே நேரத்தில் ஐந்து ஏ321 ரக விமானங்களை நிறுத்தி வைக்கக்கூடிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதனை பிரதமர் நரேந்திரமோடி கடந்த மாதம் 26ம் தேதி துவக்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து புதிய முனையத்தில் இருந்து விமானங்களை இயக்குவது, பயணிகள் முனைய செயல்பாடுகளை மேற்கொள்வதற்கான பணிகள் நடந்து வந்தன. பயணிகளின் உடைமைகளை ஸ்கேன் செய்வதற்கான எந்திரங்கள், செக் இன் கவுண்டர்களில் தேவையான வசதிகள், ஆட்களை பரிசோதனைக்கான கூடத்தில் ஸ்கேன் வசதி உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வந்தன.
இந்த பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று காலை புதிய முனையம் வழியாக போக்குவரத்து துவங்கியது. சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்த முதல் விமானத்தின் பயணிகளுக்கு மலர் கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் வரவேற்பு அளிக்கப்பட்டது. தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கி வழியனுப்பி வைத்தனர்.