Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தூத்துக்குடியில் 25 ஆண்டுகளாக நிலுவை உள்ள காவல் நிலைய மரணம் வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவு

மதுரை: தூத்துக்குடியில் 25 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வரும் காவல் நிலைய மரணம் வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம் கே.வி. நல்லூர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணி புரிந்து வருபவர் எம்.சோமசுந்தரம். இவர் கடந்த 1999-ல் தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்தார். அப்போது முத்து, மரியதாஸ், வின்சென்ட் ஆகியோர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்தார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்து வரப்பட்ட வின்சென்ட் 18.9.1999-ல் உயிரிழந்தார். போலீஸார் வின்சென்ட்டை அடித்து கொலை செய்ததாக அவரது மனைவி கிருஷ்ணம்மாள் புகார் அளித்தார். இது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடத்தி, வின்சென்ட் உயிரிழப்புக்கு சோமசுந்தரம் மற்றும் காவலர்கள் காரணம் என தூத்துக்குடி கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு ஜூன் 25-ல் விசாரணைக்கு எடுக்கப்படும் என தூத்துக்குடி நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில், வின்சென்ட் உயிரிழப்பு வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி சோமசுந்தரம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. அதை நீதிபதி நிராகரித்து விசாரணை தேதியை அறிவித்துள்ளார். இதனால் விசாரணை நியாயமாக நடைபெறுமா என்பதில் சந்தேகம் உள்ளது. எனவே விசாரணையை வேறு மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும்’ எனக் கூறியிருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, “தாளமுத்து காவல் நிலையத்தில் கடந்த 1999-ம் ஆண்டில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் உயிரிழந்த வழக்கு 25 ஆண்டுக்கு பிறகு விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இனிமேலும் நீதி வழங்காவிட்டால் நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படும். நீதி வழங்குவது நீதிமன்றங்களின் கடமை மட்டும் அல்ல. நீதி வழங்குவதில் அரசு வழக்கறிஞர்கள், மனுதாரர், எதிர் தரப்பு வழக்கறிஞர்களின் பங்கும் முக்கியமானது.

அனைவரின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே நீதி வழங்க முடியும். எனவே வழக்குகளை விரைந்து முடிக்க வழக்கறிஞர்கள் ஒத்துழைக்க வேண்டும். வழக்கில் தொடர்புடையவர்கள் காவல்துறையினர். ஜூன் 25-ல் விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது சாட்சியளிக்க வந்தவர்கள் உயர் நீதிமன்றத்தில் மனு நிலுவையில் இருந்ததால் சாட்சியம் அளிக்காமல் திரும்பியுள்ளனர். விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கத்தில் மனுதாரர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். எனவே மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இப்பணத்தை நீதிமன்றத்திற்கு சாட்சியளிக்க வந்தவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் வழங்க வேண்டும். இந்த வழக்கில் தூத்துக்குடி விசாரணை நீதிமன்றம் அரசு வழக்கறிஞருக்கு உதவ சிறப்பு அரசு வழக்குரைஞராக பி.ஆர்.எஸ். ராமமூர்த்தி நியமிக்கப்படுகிறார். தினமும் விசாரணை நடத்தி 3 மாதத்தில் வழக்கின் மொத்த விசாரணையையும் முடிக்க வேண்டும்” என தீர்ப்பளித்தார்.