Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி; எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்தாரா?.. திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு கேள்வி

சென்னை: ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய 13 அப்பாவிகளை துள்ள துடிக்கத் தூத்துக்குடியில் சுட்டுக் கொன்றது உங்கள் (அதிமுக) ஆட்சியில்தானே, அப்போது நீங்கள் ராஜினாமா செய்தீர்களா என்று எடப்பாடி பழனிசாமிக்கு திமுக முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அமைச்சர் கே.என்.நேரு ெவளியிட்ட அறிக்கை: கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி ‘சிபிஐ விசாரணை வேண்டும்’ என்று அதிமுக கோரியுள்ளது. 7 ஆண்டுகளுக்கு முன்பு இதே ராஜரத்தினம் மைதானம் அருகே ஜெயலலிதா மரணத்திற்கு சிபிஐ விசாரணை கேட்டு அன்றைக்கு ஓ.பன்னீர்செல்வம் உண்ணாவிரதம் இருந்தார்.

அன்றைக்கு மோடியிடம் செல்வாக்கு பெற்றிருந்த பன்னீர்செல்வம் அணியினரின் கோரிக்கையை ஏற்று, சிபிஐ விசாரணையை அமைத்து விடுவார்களோ என அஞ்சி, உடனே ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கையை உண்ணாவிரதத்துக்கு இரு நாட்கள் முன்பு பழனிசாமி அரசு ஏன் அவசர அவசரமாக வெளியிட்டது? அவரது தலைவியின் மர்ம மரணத்தில் சிபிஐ விசாரணைக்கு அன்று முட்டுக்கட்டை போட்ட பழனிசாமி, இன்றைக்குக் கள்ளக்குறிச்சி விவகாரத்திற்கு சிபிஐ விசாரணை கேட்பதற்கு வெட்கமாக இல்லையா?

ரூ.4,800 கோடி நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு முந்தைய அதிமுக ஆட்சியில் நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமியின் உறவினர்களுக்கு ஒப்பந்தப் பணிகள் முறைகேடாக அளிக்கப்பட்டன. அந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் 2018 அக்டோபர் 12ம் தேதி உத்தரவிட்டதுமே திருடனுக்குத் தேள் கொட்டியது போல பழனிசாமி ஏன் பதறினார்? அன்றைக்கு சிபிஐக்கு பயந்து உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டிய பழனிசாமிதான், இன்றைக்குக் கள்ளக்குறிச்சி விவகாரத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்கிறார்.

கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்” எனப் பிதற்றியிருக்கிறார் பழனிசாமி. உங்கள் முதுகைக் கொஞ்சம் திரும்பிப் பாருங்கள். கறை படிந்த வரலாறு தெரியும். ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடிய 13 அப்பாவிகளைத் துள்ள துடிக்கத் தூத்துக்குடியில் சுட்டுக் கொன்றது உங்கள் ஆட்சியில் தானே அப்போது நீங்கள் ராஜினாமா செய்தீர்களா? கள்ளக்குறிச்சி விவகாரத்தில் நீதிபதி கோகுல்தாஸ் விசாரணை ஆணையத்தைத் தமிழ்நாடு அரசு அமைத்திருக்கிறது. ஆனால், “ஒரு நபர் ஆணையம் அமைத்தாலும் மக்கள் மத்தியில் நம்பகத்தன்மை ஏற்படாது’’ என்று சொல்கிறார் பழனிசாமி.

கள்ளச் சாராயம் குடித்து மரணங்கள் நடப்பது திமுக ஆட்சியில் மட்டும்தான் என்பது போல அதிமுக பேசி வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் 2001ல் பண்ருட்டியில் கள்ளச்சாராயத்திற்கு 52 பேர் பலியானார்கள். அதன் பிறகு அதே ஆண்டில் காஞ்சிபுரம், செங்குன்றம் பகுதிகளில் கள்ளச்சாராயம் அருந்தி 30 பேருக்குமேல் இறந்தார்கள். 1993 ஜனவரியில் விழுப்புரம் அருகே சித்தலிங்கமடம் கிராமத்தில் விஷச் சாராயம் குடித்து 9 பேர் இறந்தார்கள். அதே ஆண்டு டிசம்பரில் திருத்தணி அருகே திருவாலங்காடு பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தி 7 பேர் பலியானார்கள்.

1996 ஜனவரியில் திருச்சி உறையூரில் விஷச் சாராயம் அருந்தி 10 பேர் பலியானார்கள். அப்போதெல்லாம் கள்ளச் சாராயத்தைத் தடுக்க அன்றைய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால், அதற்காக முதலமைச்சர் பதவியை அம்மையார் ஜெயலலிதா ராஜினாமா செய்யவில்லை.