தூத்துக்குடி: தூத்துக்குடியில் மரத்தில் கார் மோதியதில் பயிற்சி டாக்டர்கள் 3 பேர் பலியாகினர். மேலும் 2 இருவர் படுகாயமடைந்தனர். கோவை மாவட்டம், பி.என்.புதூர், சாஸ்திரி 1வது தெருவைச் சேர்ந்தவர் ஷாரூண்(23). புதுக்கோட்டையை சேர்ந்தவர் ராகுல் ஜெபஸ்டியான்(23). திருப்பத்தூர் மந்தைவெளி அருகேயுள்ள குறும்பேரியைச் சேர்ந்த முகிலன்(23). தூத்துக்குடி தெர்மல் நகர் குடியிருப்பைச் சேர்ந்தவர் கிருத்திக்குமார்(23). திருப்பத்தூரைச் சேர்ந்தவர் சரண்(24). இவர்கள் 5 பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் பயிற்சி டாக்டர்களாக இருந்து வருகின்றனர்.
இவர்கள் 5 பேரும் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் தூத்துக்குடியில் இருந்து தெர்மல்நகரில் உள்ள கிருத்திக்குமார் வீட்டுக்கு காரில் புறப்பட்டு சென்றுள்ளனர். காரை ஷாரூண் ஓட்டியுள்ளார். தூத்துக்குடியில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. தெற்கு பீச் ரோட்டில் படகு குழாம் அருகே கார் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து இடதுபுறத்தில் உள்ள மரத்தின் பக்கவாட்டில் மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் ஷாரூண், ராகுல் ஜெபஸ்டியான், முகிலன் ஆகியோர் உடல் நசுங்கி பலியாகினர். படுகாயமடைந்த கிருத்திக்குமார், சரண் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பத்து குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


