தூத்துக்குடி: சென்னை அருகே தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய ஒருவரை தேசிய புலனாய்வு முகமையினர் (என்.ஐ.ஏ) சமீபத்தில் கைது செய்தனர். அவரிடம் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த முஸ்பிக் ஆலம் என்பவருடன் அவர் அடிக்கடி செல்போனில் பேசி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து முஸ்பிக் ஆலம் குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரித்தபோது தூத்துக்குடி அருகே உள்ள சிலுவைப்பட்டி கடற்கரை கிராமத்தில் பெயின்ட் அடிக்கும் தொழிலாளியாக முஸ்பிக் ஆலம் வேலை செய்து வருவது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் 2 பேர் நேற்று காலை தூத்துக்குடி சிலுவைப்பட்டிக்கு வந்து அங்குள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிக்கு சென்றனர். அங்கு ஒரு அறையில் முஸ்பிக் ஆலம் உள்பட 7 பேர் தங்கி இருந்து பெயின்ட் அடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்ததை கண்ட என்.ஐ.ஏ அதிகாரிகள் முஸ்பிக் ஆலம் மற்றும் அவருக்கு நெருக்கமான 3 நண்பர்களிடமும் விசாரணை நடத்தினர். அவர்களது செல்போனை ஆய்வு செய்தனர்.
அவரது பொருட்கள் மற்றும் அறை முழுவதும் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த சோதனையின் போது, தீவிரவாதத்துடன் தொடர்புடைய எந்த ஆவணங்களும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் அவர்களை தாளமுத்துநகர் போலீசில் ஒப்படைத்து விட்டு சென்று விட்டனர். ஒன்றிய, மாநில உளவுப்பிரிவு அதிகாரிகளும் அந்த 4 பேரிடமும் விசாரணை நடத்தினர்.