*அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினர்
தூத்துக்குடி : தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் தூத்துக்குடியில் உள்ள ஒருங்கிணைந்த மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலக வளாகத்தில் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் பெறுவதற்கான அட்டை மற்றும் உயிர் காப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் இளம்பகவத் தலைமை வகித்தார்.
பயனாளிகளுக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு மானிய விலையில் 18 பயனாளிகளுக்கு மண்ணெண்ணெய் பெறுவதற்கான அட்டைகளையும், 37 பயனாளிகளுக்கு உயிர்காப்பு மிதவைச் சட்டைகளையும் வழங்கினர்.
அப்போது அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில் ‘‘முன்னாள் முதலமைச்சர் கலைஞர் ஆட்சி காலத்தில் 2010ம் ஆண்டு மீனவர்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்குவதற்கான இத்திட்டம் தொடங்கப்பட்டது. குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை, குமரியைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்களுக்காக தொடங்கப்பட்டது. மேலும், மண்ணெண்ணெய் விலை உயர்ந்தபோதும்அதனை தொடர்ச்சியாக வழங்குவதற்கு கலைஞர் நடவடிக்கை மேற்கொண்டார்.
தற்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மண்ணெண்ணெயை ரூ.61.35க்கு சந்தை விலைக்கு கொள்முதல் செய்து ரூ.25க்கு மீனவர்களுக்காக வழங்கி வருகிறார். இதன்மூலம் அரசு ஒவ்வொரு லிட்டர் தொழிலக மண்ணெண்ணெயிக்கும் ரூ.36.35 மானியமாக கொடுக்கிறது. இன்றையதினம் 148 பயனாளிகளுக்கு புதிய அட்டை வழங்கப்படுகிறது.
மேலும், பதிவு பெற்ற படகு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கும்பட்சத்தில் ஆய்வு செய்து, அவர்களுக்கும் மானிய விலையில் மண்ணெண்ணெய் பெறுவதற்கான அட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், 75% மானியத்தில் உயிர் காப்பு சட்டை (லைப் ஷாக்கெட்) வழங்கப்படுகிறது. அனைவரும் இதனை பெற்று பயனடைய வேண்டும்’’ என்றார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில் ‘‘பாரம்பரிய நாட்டுபடகு மீனவர்கள் எரிபொருளாக மண்ணெண்ணெய் வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவுபெற்ற படகு வைத்திருப்பவர்களை ஆய்வு செய்து, அவர்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்குவதற்கான ஆணையினை வெளியிட்டார். அதனடிப்படையில் தற்போது, மானிய விலையில் மண்ணெண்ணெய் பெறுவதற்கான அட்டை வழங்கப்பட்டுள்ளது.
அங்கீகாரமற்ற படகுகளுக்கும் மண்ணெண்ணெய் வழங்குவதற்கு துறையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், விடுபட்ட பயனாளிகளும் மனு அளிக்கும்பட்சத்தில் முறையாக இருப்பின், ஆய்வுசெய்து அவர்களுக்கும் மண்ணெண்ணெய் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழ்நாடு அரசு மீனவர்களின் நலனை காக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
மேலும், துண்டில் வளைவு, தடுப்புச் சுவர் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கும் மீன்வளத்துறை சார்பாக தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீனவர்களாகிய உங்களின் பாதுகாப்பு கருதி மானிய விலையில் உயிர்காப்பு மிதவைச் சட்டைகளும் வழங்கப்படுகிறது. உங்களின் உயிர் விலைமதிப்பற்றது. எனவே, இந்த உயிர் காப்பு மிதவைச் சட்டைகளை பெற்று கட்டாயமாக நீங்கள் பயன்படுத்த வேண்டும்’’ என்றார்.
நிகழ்வில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இணை இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை (மண்டலம்) சந்திரா, உதவி இயக்குநர்கள், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை (மீன்பிடித்துறைமுக மேலாண்மை) ஜெனார்த்தனம், புஷ்ராபேகம், துணை மேயர் ஜெனிட்டா, மண்டலத் தலைவர் நிர்மல்ராஜ், மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், மாநில மீனவர் நலவாரிய உறுப்பினர் அந்தோனிஸ்டாலின், இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், மகளிர்அணி அமைப்பாளர் கவிதாதேவி, மாவட்ட அணி நிர்வாகிகள் அருண்குமார், அந்தோனி கண்ணன், பிரபு, நிக்கோலாஸ் மணி,
மாநகர அணி நிர்வாகிகள் ஜீவன்ஜேக்கப், ஜெயக்கனி, மகேஸ்வரன்சிங், வினோத், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரிதங்கம், கவுன்சிலர் விஜயகுமர், வட்டச்செயலாளர்கள் டென்சிங், ரவிச்சந்திரன், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் சோபியா, பகுதி அணி அமைப்பாளர்கள் காசிராஜன், சுரேஷ்குமார், முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜே.ஜெகன், முன்னாள் கவுன்சிலர் அமாலுதீன், வட்டபிரதிநிதி புஷ்பராஜ் மற்றும் சந்திரன், கிருபாகரன், கபடிகந்தன், மணி, அல்பர்ட், செய்திமக்கள்தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.