தூத்துக்குடி: தூத்துக்குடியில் உலகத்தரம் வாய்ந்த இரு கப்பல் கட்டும் தளங்கள் ரூ.30 ஆயிரம் கோடி செலவில் கட்டுவதற்காக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ள நிலையில் ஒரு தளத்திற்கான நில ஆர்ஜித பணிகள் துவங்கியுள்ளது. தூத்துக்குடியில் ரூ.30,000 கோடி முதலீட்டில் 55 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், இரண்டு உலகத்தரம் வாய்ந்த கப்பல் கட்டும் தளங்களை நிறுவ புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது என சமீபத்தில் தூத்துக்குடி வந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்படி கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட், உலக அளவிலான வணிகக்கப்பல் கட்டும் தளத்தை தூத்துக்குடியில் நிறுவ ரூ.15 ஆயிரம் கோடியை முதலீடு செய்கிறது.
இதன் மூலம் முதல் கட்டமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும். மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ் லிமிடெட், ரூ.15ஆயிரம் கோடி முதலீட்டில் மற்றொரு உலக அளவிலான வணிகக்கப்பல் கட்டும் தளத்தை தூத்துக்குடியில் அமைக்க உள்ளது. இதன் மூலம் 45,000க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்நிலையில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் தூத்துக்குடி முத்தையாபுரத்தை அடுத்த முள்ளக்காடு முதல் பழையகாயல் வரை கடற்கரையோர பகுதியில் கப்பல்கள் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு தளம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக அப்பகுதியில் உள்ள கடற்கரையை ஒட்டிய அரசுக்கு சொந்தமான நிலங்கள், மத்திய அரசின் உப்பு இலாகாவுக்கு சொந்தமான நிலங்கள் ஆகியவை ஆர்ஜிதம் செய்ய திட்டமிப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்திற்காக மத்திய அரசின் உப்பு இலாகாவுக்கு சொந்தமான, தற்போது ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசமுள்ள உப்பள நிலங்கள் என 500 ஏக்கர் வரை முதற்கட்டமாக ஆர்ஜிதம் செய்யப்படுகிறது.
இதில் ஒன்றிய அரசின் உப்பு இலாகா மூலம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள நிலங்கள், தனியார் வசமுள்ள நிலங்கள், ஆக்கிரமிக்கப்பட்ட அரசு புறம்போக்கு நிலங்கள் என அனைத்திற்கும் உரிய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் கலெக்டர் அலுவலகத்தில் மனு செய்துள்ளனர். சிலர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
தொடர்ந்து இந்த திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய, தமிழக அரசுகள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இந்த திட்டம் தூத்துக்குடியில் செயல்படுத்தப்பட்டால் சென்னைக்கு அடுத்தபடியாக சிறிய மற்றும் பெரிய கப்பல்களை பழுது நீக்க, பராமரிக்க இங்கிருந்து கொச்சின் செல்ல வேண்டிய நிலை மாறும் என்றும் பல்லாயிரக்கணக்கானோருக்கு இங்கு வேலைவாய்ப்பு கிடடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.