தூத்துக்குடியில் ரூ.12.86 கோடி வருமான வரி பாக்கி உள்ளதாக நோட்டீஸ் வந்ததால் பெண் அதிர்ச்சி: மாவட்ட ஆட்சியரிடம் மனு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரூ.12.86 கோடி வருமான வரி பாக்கி உள்ளதாக நோட்டீஸ் வந்ததால் பெண் அதிர்ச்சி அடைந்தார். ஏழ்மை நிலையில் உள்ள எனக்கு ரூ.12.86 கோடி வருமான வரி நோட்டீஸ் வந்திருப்பதாக வீரபாண்டியன்பட்டினத்தைச் சேர்ந்த கிளமென்ஸி (47) என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியன்பட்டினத்தைச் சேர்ந்த ஜெயபாலன் என்பவரின் மனைவி கிளமென்ஸிக்கு ரூ.12.86 கோடி வருமான வரி நோட்டீஸ் வந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் ஜெயபாலனின் மனைவிக்கு ஏற்றுமதி தொழில் செய்ததாக கூறி ரூ.12.86 கோடி வருமான வரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எந்த தொழிலும் செய்யாத ஒருவருக்கு ரூ.12.86 கோடி வருமான வரி பாக்கி என நோட்டீஸ் அனுப்பி இருப்பதால் அதிர்ச்சி அடைந்துள்ளார். கிளமென்ஸியின் வாங்கிக்கணக்குகளையும் வருமான வரித்துறை முடக்கிவிட்டதாக புகார் அளித்துள்ளார். கிளமென்ஸி பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதால் மாதம் மாதம் வரக்கூடிய சம்பளம் அவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
கடந்த மாதம் 2016 - 2017, 2017 - 2018 நிதியாண்டுக்கான ஏற்றுமதி தொழில் செய்ததாக கூறி தூத்துக்குடியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். ரூ.12.86 கோடி வரி பாக்கி இருப்பதாகவும், அதை உடனே கட்டவேண்டும் எனவும் தெரிவித்து அந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நோட்டிஸுடன் தூத்துகுடியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் அதிகரிடம் கேட்டபோது முறையாக பதில் அளிக்கவில்லை. அந்த பெண் தரப்பில் நான் எந்த தொழிலும் செய்யாத நிலையில், தனக்கு எப்படி வருமான வரி போட முடியும் என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அதிகாரிகள் எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை. இதையடுத்து அந்த பெண் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். மனுவை பெற்ற ஆட்சியர் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.